வெள்ளி வென்றார் ஆயுஷ்: ஆசிய பாட்மின்டனில்

நிங்போ: ஆசிய பாட்மின்டன் ஒற்றையரில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி வெள்ளி வென்றார்.

சீனாவின் நிங்போ நகரில், ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-25' இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 20, உலகின் 'நம்பர்-2' சீனாவின் ஷி யுகி மோதினர். முதல் செட்டை 8-21 என இழந்த ஆயுஷ், இரண்டாவது செட்டை 10-21 என பறிகொடுத்தார்.

மொத்தம் 42 நிமிடம் நீடித்த போட்டியில் ஆயுஷ் 8-21, 10-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இத்தொடரில் 3 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. கடைசியாக 2023ல் இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி தங்கம் வென்றது.

இது, ஆசிய பாட்மின்டன் வரலாற்றில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெள்ளி. இதுவரை இந்தியாவுக்கு 2 தங்கம், ஒரு வெள்ளி, 16 வெண்கலம் என, மொத்தம் 19 பதக்கம் கிடைத்துள்ளது. தவிர, ஒற்றையரில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் 61 ஆண்டு கால கனவு நீடிக்கிறது. கடைசியாக 1965ல் இந்தியாவின் தினேஷ் கண்ணா தங்கம் வென்றிருந்தார்.

Advertisement