விஷ வித்துகளை ஊன்றாத நாளிதழ் 'தினமலர்'

தமிழ் பத்திரிகை வரலாற்றில், முதன்மையாகவும், முன்னோடியாகவும் விளங்கும் நாளிதழ் 'தினமலர்'. ஒவ்வொரு நாளும் மலர்ந்து, மணம் பரப்பும் மலர் போல், தினம்தினம் புத்தம்புது செய்திகளை, சுவை குன்றாமல், சுவைபட தருவது தினமலர். புதுமை எனும் பெயரால் மரபு கட்டமைப்புகளை உடைக்காமலும்; புரட்சி எனும் பெயரால் வன்முறை, விஷ வித்துகளை ஊன்றாமலும்; மக்கள் மனசாட்சியின் சங்கமமாகத் திகழும் நாளிதழ் தினமலர்.

தமிழ் எழுதப்படிக்க தெரிந்த, அனைவரும் புரிந்துகொள்ளும், எளிய தொடரமைந்த சொற்கள், அதே நேரத்தில், அறிஞர்கள் படித்துப் பார்த்து விவாதிக்கும் அழகமைந்த கருத்து செறிவு, பிற மொழி சொற்களின் தேவையற்ற திணிப்பும், ஆதிக்கமும் இடம்பெறாத நல்ல தமிழ் நாளிதழ் தினமலர்.

இலக்கிய விழாக்கள், நுால் வெளியீட்டு விழாக்கள், திருவிழாக்கள் குறித்த முன்னோட்ட, முன்னறிவிப்பு மட்டுமின்றி, அடுத்தநாள் காலை நிகழ்ச்சிகளின் வண்ணப்படம், பதிவு குறிப்பு, தினமலரின் செயலாக்கத்திற்கு சான்றாக, சாதனமாக திகழும் செயல்பாடு.

எழுத்தாளர்களின் எண்ண ஓட்டத்தை, எடை போட்டு நிறுத்தும் நியாயத்தராசு. அவர்களின் வாழ்வாதாரத்துக்காகவும், உரிமைக்காகவும் ஓடிவந்து உதவிடும் அட்சய பாத்திரம் தினமலர். நல்லதை உருவாக்கும் அறிவாற்றல், அல்லாததை அழிக்கும் துணிவாற்றல் அமைந்த நல்லோர் குழு. விளம்பரம் தேடி விலை பேசாத கலைமகளின் கடைக்கண் பார்வை பெற்று, ஆஹா என்றெழுந்து உலாவரும் தண்மை கொண்ட காலை சந்திரோதயம் தினமலர்.

பவள விழா கடந்து நுாற்றாண்டு காண நடைபோடும் நாளிதழ் வாழ்க.



பெ.கி.பிரபாகரன்,

செயலர், இலக்கிய வட்டம், சென்னை மற்றும் பொருளாளர், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்

Advertisement