நகராட்சி மின்மயானம் அருகே குப்பைகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சி மின் மயானம் அருகே கோமுகி ஆற்றினை ஒட்டியவாறு கொட்டப்பட்டுள்ள குப்பைகள் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் சாலையில் கோமுகி ஆற்றுப்பாலம் அருகே நகராட்சி மின்மயானம் மற்றும் குப்பை கிடங்கு உள்ளது. நகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் கிடங்கு மற்றும் ஆற்றின் ஓரப்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களாக தேங்கியுள்ள குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கின்றன. இவை அகற்றப்படாமல் உள்ளன.

இந்நிலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் கோமுகி ஆற்றினை ஒட்டியவாறு உள்ள குப்பைகள் திடீரென தீ பிடித்து எரிய துவங்கியது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவத்துவங்கியது. தகவலறிந்த நகராட்சி பணியாளர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) சக்திவேல் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

தீயணைப்பு வீரர்கள் 2 குழாய்கள் மூலமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்தனர்.

ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு குப்பைகளில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குப்பை கிடங்கு சேதமடைந்த நிலையில், ஒரு மாதத்திற்கு பிறகு ஆற்றங்கரை ஓரமாக கொட்டப்பட்டிருந்த குப்பைகள் தீ பிடித்து எரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement