பூத் சிலிப்பை ஓட்டுச்சாவடி அலுவலர்களே வழங்க  எதிர்பார்ப்பு: கட்சியினர் வழங்கினால் பாரபட்சம் காட்ட வாய்ப்பு

காரியாபட்டி: சட்டசபை தேர்தலுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. பூத் நிலை அலுவலர்களே வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். கட்சியினர் வழங்குவதை தவிர்க்க கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு 7 தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வினியோகிக்கும் பணி துவங்கியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மூலம் வீடு தோறும் சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்க வேண்டும். தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, பூத் சிலிப் நேரடியாக வாக்காளர்களிடமோ, அவர்களின் குடும்பத்தில் உள்ள வயது வந்த உறுப்பினர்களிடமோ வழங்க வேண்டும். வழங்கியதை பதிவு செய்ய கையெழுத்து, விரல் ரேகை பெற வேண்டும்.

மொத்தமாக ஒரே இடத்தில் சிலிப்களை கொடுக்க அனுமதி இல்லை. அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், தேர்தல் தேதியை முன்னிட்டு காலவரையறைக்குள் பூத் சிலிப் விநியோகம் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக வாக்குப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன் வழங்கி பணியை நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

பூத் சிலிப்பில் வாக்காளரின் பெயர், ஓட்டுச்சாவடி எண், பகுதி எண், வாக்காளர் வரிசை எண் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இடம் பெற்றிருப்பதால், வாக்காளர்கள் தங்கள் ஓட்டுச்சாவடியை எளிதில் கண்டறிய முடியும்.

இந்நிலையில், சில பகுதிகளில் அலுவலர்கள் வழங்க வேண்டிய பூத் சிலிப்புகளை, கட்சியினரிடம் கொடுத்து வினியோகிக்கப்படுவதால் வாக்காளர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. தேர்தல் விதிமுறைகளின்படி, கட்சியினருக்கு பூத் சிலிப் வழங்கும் அதிகாரம் இல்லை. அவர்கள் அலுவலர்களுடன் கண்காணிப்பிற்காக மட்டுமே செல்ல முடியும். மொத்தமாக சிலிப்புகளை கட்சியினரிடம் வழங்குவது விதிமுறை மீறலாகும்.

காரணம் ஒரு கட்சியினர் மற்ற கட்சியினரின் பூத் சிலிப்பை மறைத்து, அவர் ஓட்டு போடுவதை குழப்ப முயற்சிக்கலாம். இதன் காரணமாக அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் பூத் சிலிப் வினியோகம் அலுவலர்கள் மூலம் நேரடியாக நடைபெற வேண்டும். வீடு தோறும் வழங்கும் பணியை கண்காணிக்க மேற்பார்வை அதிகாரிகள் நியமிக்க வேண்டும்.

பூத் சிலிப் பெற முடியாத வாக்காளர்களுக்காக ஓட்டுச்சாவடிக்கு அருகில் உதவி மையங்கள் அமைக்க வேண்டும். பூத் சிலிப் வினியோகத்தில் அலட்சியம், முறைகேடு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. தேர்தல் பணிகளில் தவறுகள் நடந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்களை பணியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் பூத் சிலிப் விநியோகப் பணியை வெளிப்படையாகவும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் மேற்கொள்ள அலுவலர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement