ஐந்தாண்டு கஷ்டம்; இந்த மாதம் விடிவு! அ.தி.மு.க., வேட்பாளர் தாமோதரன் பிரசாரம்

போத்தனுார்: கோவை, கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட மலுமிச்சம்பட்டி (நான்கு ரோடு பகுதி), கிருஷ்ணா நகர், எம்.ஜி.ஆர்., நகர், அண்ணா நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட 15 இடங்களில் அ.தி.மு.க., வேட்பாளர் தாமோதரன் ஓட்டு சேகரித்தார்.

பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது :

கடந்த ஐந்தாண்டில், மின்சார கட்டணம், பத்திரப்பதிவு உள்ளிட்ட பல சேவைகளின் கட்டணத்தை தி.மு.க., அரசு உயர்த்தியது. தமிழக மக்களை அடமானம் வைத்து, தி.மு.க., அரசு, ரூ.5 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது. இதில், எந்தெந்த பணிகள் எங்கே நடந்தன என்று, தி.மு.க., காரர்களுக்கு கூட தெரியாது. திறமையாக ஆட்சி செய்திருந்தால், இந்த அளவுக்கு கடன் இருந்திருக்காது. மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தின் கடன் இன்னும் அதிகரிக்கும். நீங்கள் கடந்த, ஐந்து ஆண்டுகளாக பட்ட அனைத்து கஷ்டங்களும், இந்த மாதத்துடன் முடிவடைந்து விடும்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் சிந்தித்து அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளியுங்கள். அ.தி.மு.க., ஆட்சியில் பெண்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். வரிச்சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிறப்பு உதவித்தொகையாக, ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

பிரசாரத்தின்போது, தொகுதி பொறுப்பாளர் எட்டிமடை சண்முகம், அ.ம.மு.க., கழக அமைப்பு செயலாளர் ரோகினி, மாவட்ட விவசாய அணி செயலாளர் மகாலிங்கம், மதுக்கரை நகர கழக செயலாளர் சண்முகராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சதீஷ்குமார், பா.ஜ., கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் வசந்தராஜன், பா.ஜ., தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என, பலர் கலந்து கொண்டனர்.

Advertisement