பட்டினியில் வாடும் பழங்குடி மக்கள் குரல் கொடுக்காத அரசியல் கட்சிகள்

கோவை: மழைக்காலத்தில் பழங்குடி மக்கள் பட்டினியில் வாடுவதால், கேரளா, கர்நாடகா மாநிலங்களை போல அரசு ஊட்டச்சத்து உணவுகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக வைக்கப்படுகிறது. பூர்வகுடிகளின் கண்ணீரை துடைக்க எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் ரூ.8,000 பரிசு கூப்பன் கொடுப்போம் என்று தி.மு.க.வாக்குறுதி கொடுத்துள்ளது. அ.தி.மு.க. பிரிஜ் கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளது. பூர்வகுடிக்களான பழங்குடி மக்கள், அவலத்தை தி.மு.க. தொடங்கி த.வெ.க. வரை எந்தக் கட்சியும் கண்டு கொள்ளவில்லை.

மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலையை ஒட்டி கோவை, நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில், இருளர், தோடர், காடர், குறும்பர் உள்ளிட்ட, 37 இனங்களைச் சேர்ந்த 9 லட்சம் பழங்குடிகள் உள்ளனர். அடர்ந்த காடுகளைச் சார்ந்து மட்டுமே, 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வசிக்கின்றனர்.

மழைக்காலங்களில் எந்த பணியும் இல்லாமல் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்குகிறது. மழையால் விவசாயம் செய்ய முடியாமல், உணவும் கிடைக்காமல் மக்கள் பட்டினியில் வாடுகின்றனர். மீன்பிடி தடைக்காலத்தில், அரசு மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கி உதவி செய்வதை போல, மழைக் காலத்தில் பழங்குடி மக்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்களை வழங்கி, பட்டினியை போக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. எந்த அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இது வாக்குறுதியாக கூட இடம்பெறுவதில்லை.

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள கல்லார்குடி கிராமம் காடர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி கூறுகையில், “எங்கள் பகுதியில் ஏப்ரல், மே மாதமே மழை தொடங்கிவிடும். காட்டுக்கு சென்றால் தான் தேன், குங்கிலியம், குடம்புளி போன்ற பொருட்கள் கிடைக்கும். மழைக்காலத்தில் பெரும்பாலும் காட்டிற்குள் செல்ல முடியாது.வெளியில் சென்றும் பொருட்கள் வாங்க முடியாது. ரேஷனில் வழங்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை வைத்துதான் சமாளிப்போம். நாங்கள் பொதுவாக குச்சி கிழங்கு, ராகி, மக்கா சோளம் விளைவிப்போம். அதைத்தான் தினசரி சாப்பிடுவோம். ரேஷனில் அரிசி போதுமான அளவுக்கு கிடைத்தாலும் பருப்பு, எண்ணெய் குறைவாகத்தான் இருக்கும். மழைக் காலத்தில் உணவுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது,” என்றார்.

ஊட்டச்சத்து அவசியம் கர்நாடகாவில் 6 மாதங்கள் தொடர்ந்து மழை பெய்யும். வெளியில் வரவே முடியாது. அம்மாநில அரசு கடந்த 2014-ம் ஆண்டு சிறப்பு ஊட்டச்சத்து உணவு திட்டத்தை செயல்படுத்தியது. காடு சார்ந்துள்ள பழங்குடி மக்களுக்கு மட்டும் ரேஷனில் 15 கிலோ அரிசி, 5 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ பச்சை பயிறு, 3 கிலோ கொள்ளு, 2 லிட்டர் சமையல் எண்ணெய், 45 முட்டை, 1 கிலோ சுண்டல், 3 கிலோ ராகி மாவு, 1 கிலோ நெய் உள்ளிட்ட, 4 கிலோ வெல்லம், 20 வகை பொருட்களை வழங்குகின்றனர். ஆரம்பத்தில் 6 மாதங்கள் மட்டும் வழங்கி வந்தனர். ஊட்டச்சத்து குறைபாடு அதிகமிருப்பதால், தற்போது ஆண்டு முழுவதுமே வழங்கி வருகின்றனர். வனத்தில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு 100 நாள் வேலை திட்டமும் இருக்காது. ஊட்டச்சத்து குறைபாட்டால் ரத்த சோகை, குறை பிரசவம், கண் பார்வை போன்ற பிரச்னைகள் பழங்குடி மக்களிடம் அதிகரித்து வருகிறது. மழைக்காலத்தில் மட்டுமாவது அரசு ரேஷன் கடைகள் வாயிலாக ஊட்டச்சத்து உணவுப் பொருட்களை வழங்க வேண்டும். - லீலாவதி தனராஜ், முன்னாள் உறுப்பினர், ஆதிதிராவிடர் பழங்குடி நல ஆணையம்.

Advertisement