உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும் கும்மிடி அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

ஊத்துக்கோட்டை: ''கும்மிடிப்பூண்டி சட்ட சபை தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் மருத்துவம், சாலை வசதி, தெருவிளக்கு, போக்குவரத்து வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேம் படுத்தப்படும்,” என, அ.தி.மு.க., வேட்பாளர் வி.சுதாகர் தெரிவித்தார்.

தமிழகத்தின் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வி.சுதாகர் நேற்று, எல்லாபுரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள அத்திவாக்கம், ஆலப்பாக்கம், கிளாம்பாக்கம், திருநிலை, புன்னப்பாக்கம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, அ.தி.மு.க., வேட்பாளர் வி.சுதாகர் கூறியதாவது:

கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை, தெருவிளக்கு, போக்குவரத்து வசதிகள் சரிவர இல்லை. மேலும், மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தேவையான வசதிகள் இல்லை.

இதனால், நோயாளிகள் சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாநகர பேருந்துகள் குறைவாக இயக்கப்படுகின்றன. அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், தொகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து, ஒவ்வொரு கிராமங்களிலும், வேட்பாளர் சுதாகருக்கு பெண்கள் மலர் துாவி, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதில், முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமார், பா.ம.க., மாவட்ட செலயர் பிரகாஷ், பா.ஜ., மாவட்ட தலைவர் சுந்தரம், எல்லாபுரம் மேற்கு, கிழக்கு ஒன்றிய செயலர்கள் வேதகிரி, கோதண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement