கடம்பத்துார் தனி தாலுகாவாக தரம் உயர்த்தப்படும் பிரசாரத்தில் அ.தி.மு.க., பி.வி.ரமணா வாக்குறுதி
திருவள்ளூர்: ''கடம்பத்துார் ஒன்றியத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய தாலுகா அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அ.தி.மு.க., வேட்பாளர் பி.வி.ரமணா பிரசாரத்தில் உறுதி அளித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருவள்ளூர் சட்டசபை தொகுதியில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா போட்டியிடுகிறார். இவர், பூண்டி ஒன்றியத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது, வாலிபால் விளையாடி கொண்டிருந்த இளைஞர்களை சந்தித்து, அவர்களுடன் உரையாடினார்.
அப்போது, இளைஞர்களுடன் வாலிபால் விளையாடியும், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையை கூறியும் ஓட்டு கேட்டார். நேற்று, கடம்பத்துார் மேற்கு ஒன்றியத்தில் அகரம், உளுந்தை, வயலுார், பண்ணுார், புதுப்பட்டு, கூவம், கீழச்சேரி, மப்பேடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, பி.வி.ரமணா கூறியதாவது:
ஆளும் தி.மு.க., அரசு மக்களை வஞ்சிக்கிறது. மக்களுக்கு எவ்வித நலத்திட்ட உதவிகளையும் ஸ்டாலின் வழங்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்து, பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றவுடன், அனைத்து மகளிருக்கும் 2,000 ரூபாய் உதவித்தொகை, நிவாரண தொகை 10,000 ரூபாய், வீட்டிற்கு ஒரு 'பிரிஜ்' வழங்கப்படும்.
திருவள்ளூர் தாலுகாவில் இருந்து கடம்பத்துாரை தலைமையிடமாக கொண்டு, புதிய தாலுகா அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடம்பத்துார், பூண்டி, திருவாலங்காடு ஒன்றியங்களில், நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.
திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட குக்கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாததால், சிற்றுந்து சேவை தொடங்கப்படும். திருவள்ளூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன், தே.ஜ., கூட்டணியைச் சேர்ந்த, பா.ஜ., - அ.ம.மு.க., - புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
மேலும்
-
கேபிள் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஜனநாயகன்: ரசிகர்கள் அதிர்ச்சி
-
மேல்தள சுவர் இடிந்து விழுந்து சாலையில் சென்ற மூதாட்டி பலி :காரைக்காலில் பரபரப்பு
-
சுவற்றின் மீது பைக் மோதி வாலிபர் பலி
-
பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
-
இறந்த நபர்கள் யார் போலீசார் விசாரணை
-
கூலி தொழிலாளி மயங்கி விழுந்து பலி