காமன்வெல்த் ஊழல்; காங்கிரஸ் தலைவர் சிக்கியது இப்படித்தான்!
பத்திரிகை நிருபர்கள் பலருக்கும் தினந்தோறும் காலையிலிருந்து இரவு வரை ஓடிக்கொண்டேயிருக்க வேண்டிய சூழ்நிலை. இடையே எங்காவது கொஞ்ச நேரம் இளைப்பாற நேரம் கிடைத்தால் டில்லி நிருபர்கள் படையெடுக்கும் இடம் பார்லிமென்டுக்கு எதிரே உள்ள பிரஸ் கிளப். குறைந்த விலையில் நல்ல சாப்பாடு. அத்தோடு உயர்ரக பானங்களும் கிடைக்கும். வெளி விலையோடு இங்கு குறைவாக இருக்கும். அதனால் நிருபர்கள் பலரும் பானம் அருந்த இங்கே வருவார்கள். அப்போது நாட்டு நடப்பு, என்ன எக்ஸ்குளூசிவ் உட்பட பல விஷயங்கள் அலசப்படும்.
சில எக்ஸ்குளூசிவ் செய்திகள் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. பிரஸ் கிளப்பை தவிர்த்து இந்திய பெண் நிருபர்கள் அமைப்பு என தனியாக ஒன்று உள்ளது. இதுவும் பார்லிமென்டுக்கு பக்கத்தில் மெரிடியன் ஹோட்டலுக்கு அருகே அமைந்துள்ளது. இங்கும் அனைத்து வசதிகளும் உண்டு. டில்லி பெண் நிருபர்கள் பிரஸ் கிளப்பிற்கு வந்தாலும் இங்கேதான் அதிகமாக கூடுவர். இப்படி எங்களுக்கென்று ஒரு இடம், சக செய்தியாளர்கள் கூடி விவாதிப்பது, சில செய்திகள் உண்மையா என விசாரித்து தெரிந்து கொள்வது என அனைத்தும் இங்குதான் நடக்கும். அது டில்லியிலுள்ள பெங்காலி மார்க்கெட்.
வசதியான இடம்
முதலில் இந்த பெங்காலி மார்க்கெட் எங்கிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். பெயர்தான் பெங்காலி மார்க்கெட்டே தவிர இங்கு பெங்காலிகளை அதிகமாக நான் பார்த்தது கிடையாது. மிகவும் வசதியான இடம் பெங்காலி மார்க்கெட். அருகேயே பிரசார் பாரதி, அதாவது தூரதர்ஷனின் அலுவலகம். பக்கத்திலேயே மண்டி ஹவுஸ் மெட்ரோ ஸ்டேஷன். இரண்டரை கிமீ தூரத்திலேயே பார்லிமென்ட். பிரபலமான நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமா இங்குதான் உள்ளது. அதோடு பல ஆடிடோரியங்கள்.
இங்கு தினமும் ஏதாவது நாடகம் நடைபெற்றுக்கொண்டிருக்கும். ஒரு கி.மீ தூரத்தில் டில்லியின் மையப் பகுதி மார்க்கெட் கன்னாட் ப்ளேஸ். சாப்பிடுவதற்கு வசதிகள். நத்து ஸ்வீட்ஸ் பக்கத்திலேயே உள்ளது. மிகவும் புகழ் பெற்ற ரெஸ்ட்டாரண்ட் இது. இதற்கு பக்கத்திலேயே இவர்களுடைய பேக்கரியும் உண்டு. அரசு அலுவலகங்களில் பார்ட்டி என்றால் இங்கிருந்துதான் உணவுப்பண்டங்கள் போகும். இவர்களுடைய சோலே பட்டூரா பிரபலம். தவிர, பல வெரைட்டியில் இனிப்புகள். இங்குதான் எங்களுடைய ஹட்டா; அதாவது கூடும் இடம்.
தோடர்மல் சாலை
பெங்காலி மார்க்கெட் பகுதியில் உள்ளது தோடர்மல் ரோடு. அக்பர் அமைச்சரவையில் நிதி அமைச்சராக பணியாற்றியவர் ராஜா தோடர்மல். இவர் காலத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர். இவர் பெயரால் உள்ள சாலையில் நண்பர் டில்லி ராஜகோபாலனின் அலுவலகம். அங்குதான் நாங்கள் அனைவரும் கூடுவோம். பல சமயம் நத்து ஸ்வீட்சிலிருந்து சாப்பாடு வரவழைத்து மதிய வேளையில் சாப்பிட்டுக்கொண்டே அரசியலை அலசுவோம்.
நான், ஹிந்துஸ்தான் டைம்ஸின் சேகர் அய்யர், தி வீக் மற்றும் மலையாள மனோரமாவின் டில்லி எடிட்டர் சச்சிதானந்த மூர்த்தி (இவர் காலமாகிவிட்டார்), சீனியர் பத்திரிகையாளரும் தாவூத் இப்ராஹிமை பேட்டி எடுத்த ஒரே பத்திரிகையாளருமான ஷீலா பட் (இவர் பேட்டி எடுத்த போது க்ளிக் செய்த தாவூத் படம்தான் துரந்தர் 2விலும் காட்டப்படுகிறது), கணபதி சுப்ரமணியம், ராஜ்தீப், பர்க்கா தத், நவிகா குமார் உட்பட பல சீனியர் டிவி செய்தியாளர்கள் என அனைவருமே இங்கு வந்துள்ளனர்.
சுரேஷ் கல்மாடி
மதியம் அல்லது மாலை நேரத்தில் தோடர்மல் சாலையிலுள்ள அலுவலகத்தில் கூடுவோம். இங்கிருந்து நேஷனல் மீடியாவிற்கு பல செய்திகள் சென்றுள்ளன. 2010 காமன்வெல்த் விளையாட்டை இந்தியா நடத்தியது. அப்போது இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்தவர் காங்கிரசின் சுரேஷ் கல்மாடி. இவர் இந்த விளையாட்டு விவகாரத்தில் பல ஊழல்களில் ஈடுபட்டார்.
இந்த விவகாரம் முதன் முதலில் தோடர்மல் சாலையிலுள்ள எங்கள் ஹட்டாவிலிருந்துதான் கிளம்பியது. பிற்பாடு அதை ஒரு பிரபல ஆங்கில சேனல் பத்திரிகையாளர் வெளிநாட்டிற்கெல்லாம் சென்று இந்த ஊழல் குறித்து செய்தி சேகரித்து தேசிய அளவில் இந்த செய்தியை பெரிதாக்கினார். இதனால் கல்மாடி கைது செய்யப்பட்டு அவருடைய அரசியல் அஸ்தமனமானது. இதற்கு காரணம் பெங்காலி மார்க்கெட்டில் இருந்த எங்கள் ஹட்டாதான்.
தேர்தல் ஆணையருக்கு குறி
அடுத்து எங்கள் ஹட்டாவிலிருந்து வெளியான செய்தி பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையராக இருந்த ஒருவரைப் பற்றியது. அவருடைய என்.ஜி.ஓ.,விற்கு எம்பிக்கள் நிதியிலிருந்து பணம் பெறப்பட்டது. இப்படி தங்கள் எம்பி தொகுதி நிதியிலிருந்து பணம் கொடுத்தவர்கள் அனைவருமே காங்கிரஸ்காரர்கள். இதையும் அந்த ஆங்கில சேனல் பிரேக்கிங் செய்தியாக்கியது. இதைத் தொடர்ந்து விவாதங்கள்... அப்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். மன்மோகன் சிங் பிரதமர். எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை பெரிதாக்கின. 200க்கும் மேற்பட்ட எம்பிக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமைச் சந்தித்து புகார் அளித்தனர்.
அவர் இந்த புகாரை தலைமை தேர்தல் ஆணையருக்கு அனுப்பாமல் பிரதமருக்கும் அரசுக்கும் அனுப்பினார். மன்மோகன் சிங் அரசு இது குறித்து தலைமை தேர்தல் ஆணையரின் கருத்தைக் கேட்டிருக்க வேண்டும். ஆனால் மன்மோகன் சிங் இதை அட்டர்னி ஜெனரலுக்கு அனுப்பினார். சம்பந்தப்பட்ட ஆணையர் பதவிக்கு வருவதற்கு முன் இந்த என்.ஜி.ஓ சம்பந்தப்பட்ட விஷயங்கள் நடந்துள்ளன. எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்கிற பேச்சுக்கே இடமில்லை என கருத்து தெரிவித்தார். விளைவு அந்த ஆணையர் பிற்பாடு தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்று ஓய்வு பெற்றார்.
பிரேக்கிங் நியூஸ்
ஒரு நாள் பெங்காலி மார்க்கெட் பத்திரிகை நண்பரிடமிருந்து போன். “இன்னும் இரண்டு நாளில் நடைபெற உள்ள கவர்னர் மாநாடு நடக்கப்போவதில்லை” எனக்கு எதுவுமே புரியவில்லை. ஜனாதிபதி மாளிகையில்தான் இந்த மாநாடு நடக்கும். அனைத்து மாநில கவர்னர்களும் கலந்து கொள்வார்கள். ஜனாதிபதிதான் இதற்கு தலைமை வகிப்பார்.
அப்போது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தார். “ஒன்றும் புரியவில்லையே,” என்றேன், நான். அடுத்து அவர் சொன்ன விஷயம் அதிர்ச்சியடையவைத்தது. “ஜனாதிபதி அப்துல் கலாம் நடக்கும் போது கீழே விழுந்துவிட்டார். அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு.. இதனால் கவர்னர் மாநாடு நடக்காது,” என்றார்.
எனக்கு அதிர்ச்சி.
“உடனே இதை உன் டிவியில் ப்ளாஷ் செய்துவிடு.” என்றார். 'எப்படி இந்த செய்தி கிடைத்தது' என்றும், அவர் சொன்னார். உளவுத்துறை தலைவர் ஒரு தமிழர். அவருடன் பெங்காலி மார்க்கெட் நண்பர் நல்ல பழக்கம். கவர்னர் மாநாடு குறித்து உளவுத்துறை தலைவருடன் இவர் பேச, 'அது எங்க நடக்கப்போகிறது.
ஜனாதிபதி கீழே விழுந்து தோள்பட்டையில் எலும்பு முறிவு' என சொல்லியிருக்கிறார் உளவுத்துறை தலைவர். பத்திரிகையாளர்களிடம் ஒரு விஷயத்தைச் சொன்னால் அது உடனே செய்தியாகிவிடும். அதுவும் பிரபல டிவிக்களில் வந்தால் வைரல்தான். அதனால்தான் என்னிடம் அந்த செய்தியை பகிர்ந்து கொண்டார். அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு என் செய்தி ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னேன்.
அவருக்கு தெரிந்த சிலருடன் பேசிவிட்டு உடனே செய்தியை ப்ளாஷ் செய்துவிட்டார். இதைப் பார்த்து மற்ற சேனல்களும் ப்ளாஷ் செய்தன. கவர்னர் மாநாடு தள்ளிப்போடப்பட்டது. ராணுவ மருத்துவமனையில் அப்துல் கலாமிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்படி பல செய்திகள் எங்கள் குழுமத்திலிருந்து வெளியாகி தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
செயலர் அறையில்…
நானும் அந்த நண்பரும் டில்லி சாஸ்திரி பவனில் உள்ள பெட்ரோலியம் அமைச்சகத்திற்கு சென்றோம். அங்கு செயலராக இருந்தவர் ஒரு தமிழர். தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரி. எங்கள் இருவருக்குமே நல்ல நண்பர். அவரை சந்திக்க அவர் அறைக்குள் நுழைந்தோம்.
எந்த அதிகாரியின் அறைக்கு சென்றாலும் அவர் டேபிளில் என்ன பேப்பர் பைல் இருக்கிறது... அது பற்றி பேச்சுக் கொடுத்து ஏதாவது செய்தி தேற்ற முடியுமா என முயற்சித்துப் பார்ப்பது வழக்கம். இவருடைய டேபிளில் அப்படி பார்த்த போது பல பைல்கள் இருந்தன. கான்பிடன்ஷியல் என எழுதப்பட்ட ஒரு பைலில் பல பேப்பர்கள் கொத்தாக இருந்தன.
அந்த பைல் திறந்திருந்தது. மறுநாள் நடக்கவிருக்கும் கேபினட் மீட்டிங்கில் என்னென்ன விஷயங்கள் பேசப்பட உள்ளது என்பதற்கான அஜெண்டா பேப்பர்கள்தான் அவை.செயலர் எங்களைப் பார்த்தார். எங்கள் ஆர்வத்தையும் புரிந்து கொண்டார். அஜெண்டா பேப்பர்களை எங்கள் கையில் கொடுத்து, “இங்கேயே படிச்சுட்டு வைத்துவிடுங்கள்” என்று கூறி விட்டார். இதற்கு காரணம், அவர் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை தான்.அந்த அஜெண்டாவில் இருந்து பல செய்திகளை பிளாஷ் செய்தேன்.
விஐபிக்கள்
பெங்காலி மார்க்கெட்டில் உள்ள எங்கள் இடத்திற்கு வராத விஐபிக்களே கிடையாது. மதிய சாப்பாட்டிற்கு விஐபியை அழைப்பார் ராஜகோபாலன். விஐபியுடன் சாப்பிட்டுக்கொண்டே அரசியல் பேசுவோம்.
இப்படி பேசுவதால் பல செய்திகள் கிடைத்துள்ளன. அப்போதைய கேபினட் செயலர் கே.எம். சந்திரசேகர், மத்திய தலைமை விஜிலென்ஸ் கமிஷனர், தலைமை தேர்தல் ஆணையர் நீடாமங்கலம் கோபாலஸ்வாமி, அப்போதைய கருப்புப்பூனைப்படை (NSG) தலைவர் மோஷியாரி உட்பட பல அதிகாரிகள் இங்கே வந்துள்ளனர்.
அரசியல்வாதிகளை எடுத்துக்கொண்டால் பாஜக தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி, இடதுசாரி தலைவர் டி.ராஜா, காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ், திமுக, அதிமுக எம்பிக்கள், வட இந்திய அரசியல் தலைவர்கள் என பலர் இங்கு வந்துள்ளனர்.
அருகேதான் அருண் ஜேட்லியின் அலுவலகம். இங்கு இத்தனை விஐபிக்கள் எப்படி வருகின்றனர் என ஒரு முறை அவர் கேட்டுள்ளார். இங்கு அப்படி என்னதான் பேசுகிறார்கள், நீங்களும் போய் அங்கு அமர்ந்து கொள்ளுங்கள் என நிர்மலா சீதாராமனிடம் ஒரு முறை சொன்னேன் என அருண் ஜெட்லி சிரித்துக்கொண்டே எங்களிடம் சொன்னார்.
எல்லோரும் செய்தியாளர்கள்
பத்திரிகையாளர் செய்திகளை எக்ஸ்குளுசிவ் ஆக வெளியிடும் போது அந்த செய்தி தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் வைத்திருப்பார்கள். அந்த ஆவணங்கள் அவ்வளவு எளிதாக கிடைக்காது. சில அதிகாரிகளை சந்திக்க வேண்டும்... அவர் உங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், அப்படியிருந்தும் ஆவணங்களைத் தர யோசிப்பார்கள். இப்படி பல பிரச்னைகள். இதையெல்லாம் கடந்துதான் பத்திரிகையாளர் ஆவணங்களைக் கைப்பற்றி அதை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே பிரத்யேக செய்திகளை வெளியிடுவர்.
இப்போது நிலைமை வெகுவாக மாறி விட்டது. முன்பிருந்தது போல அதிகாரிகளையோ, அமைச்சர்களையோ அவ்வளவு சுலபமாக சந்திக்க முடியாது. ஏகப்பட்ட கெடுபிடிகள். யார் யாரை சந்திக்கிறார்கள் என உளவுத்துறையும் கண்காணிக்கிறது. அப்படியே சந்தித்தாலும் அவர்கள் எதையும் சொல்வதில்லை. அப்படியே பகிர்ந்து கொண்டால் அவர்கள் நிலை அதோகதிதான். அமைச்சர்களும் மனம் விட்டு பேசுவதில்லை. ஆவணங்களைப் பெறுவது என்பது இப்போது கனவாகிவிட்டது. அதனால் என்ன, அதுதான் இந்தியாவில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவருமே நிருபர்களாகிவிட்டனரே!
- அ.வைத்தியநாதன்
அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.
தொடர்புக்கு: mailto:vaithi@dinamalar.in
சரி இப்ப ரிசல்ட் என்ன 2G போல CHARGES NOT PROVED , CBI எந்த வித ஆவணம் கொடுக்க வில்லை
Naveen Chavla the correpted Election Commissioner
இனிமையான மலரும் நினைவுகள் நண்பரே. நீங்கள் எல்லோரும் பிளாஷ் செய்தும் சுரேஷ் கல்மாடி ஐ ஒன்றும் செய்ய முடியவில்லை. Nice narration. keep writing.
நவீன் சாவ்லா கரெக்ப்ட்டேட் கமிஷனர்
Suresh Kalmadi was instrumental in opening a lot of reservation centres around Pune before the advent of online booking.
பாஜக,திமுக மாதிரி யாருக்கும் தெரியாம ஊழல் செய்ய தெரிஞ்சி வச்சிக்கோங்க
after the exit of Sharad Pawar, suresh kalmadi was the only prominent congress person in that part of country. he is the main reason for the development of pune
சுரேஷ் கல்மாடி ஒரு காலத்தில் ஓஹோ என்ற செல்வாக்குடன் மகாராஷ்டிராவில் இருந்தவர். அந்தோ பரிதாபம். அவரது அரசியல் இந்த ஊழலால் நாசமாகி விட்டது.மேலும்
-
மேல்தள சுவர் இடிந்து விழுந்து சாலையில் சென்ற மூதாட்டி பலி :காரைக்காலில் பரபரப்பு
-
சுவற்றின் மீது பைக் மோதி வாலிபர் பலி
-
பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
-
இறந்த நபர்கள் யார் போலீசார் விசாரணை
-
கூலி தொழிலாளி மயங்கி விழுந்து பலி
-
நெய்வேலி மாற்றுக்கட்சியினர் தி.மு.க., வில் ஐக்கியம்