என்னென்ன செலவு செய்தோம் :கணக்கு காண்பித்த வேட்பாளர்கள்
சூலுார்: பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள போதிலும், செலவு கணக்கு சமர்ப்பிப்பதிலும் வேட்பாளர்கள் தீவிரம் காட்டுகின்றனர்.
சூலுார் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., -- தி.மு.க., -- நா.த.க., -- த.வெ.க., வேட்பாளர்கள் மற்றும் சுயயேச்சைகள் உட்பட 15 பேர் பேட்டியிடுகின்றனர். பிரதான கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், செலவு கணக்கு விபரங்களை சமர்ப்பிப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். மூன்று நாட்களுக்கு ஒரு முறை கணக்கு சமர்ப்பிக்க வேண்டும் என, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
அதனால், பிரதான கட்சி வேட்பாளர்கள், செலவு கணக்கு விபரங்களை, தங்களின் பிரதான ஏஜெண்ட் வாயிலாக தாக்கல் செய்கின்றனர். சுயேச்சை வேட்பாளர்கள் நேரடியாக வந்து, செலவு கணக்கு பிரிவு அதிகாரிகளிடம் கணக்கு விபரங்களை தாக்கல் செய்தனர்.
பிரசார வாகனத்தின் டீசல் செலவு, நோட்டீஸ், போஸ்டர்கள் அடிக்க ஆன செலவு, உணவுக்கான செலவு என, அனைத்து செலவு விபரங்களை அதற்குரிய ரசீதுகளுடன் வேட்பாளர்கள் சமர்ப்பித்தனர். அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து, கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.