புத்தாண்டு விடுமுறையால் பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநி: -புத்தாண்டு விடுமுறையால் பழநி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்த நிலையில் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

பழநி முருகன் கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் வருகை புரிந்தனர்.

கோயிலுக்கு செல்ல பக்தர்கள் ரோப் காரில் பல மணி நேரம் காத்திருந்தனர். கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் நான்கு மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர்.

கூட்டம் அதிகரிக்க குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோயில் பாரவேல் மண்டபம், உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் ஆகியவற்றில் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

பக்தர்களின் வாகனங்கள் அதிக அளவில் இருந்ததால், முக்கிய ரோடு ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி இருந்தனர். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

பழநி முருகன் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி யாகம் நடைபெற்றது.

யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், திருஆவினன்குடி, லட்சுமி நாராயண பெருமாள், பட்டத்து விநாயகர் கோயில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

வடமதுரை : சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்.

தென்னம்பட்டி சவடம்மன், எரியோடு மணியகாரன்பட்டி தாயம்மன் கோயில் , பல குல தெய்வ கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பக்தர்கள் பலர் மாலை அணிந்து சித்திரை விழாவிற்கான விரதத்தை துவக்கினர்.

தொட்டையகவுண்டனுாரில் விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி ஊர்மக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப் பட்டது.

ரெட்டியார்சத்திரம்: ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் வெளி மாநில பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இதையொட்டி மூலவருக்கு பாலாபிஷேகம், பழக்காப்பு அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது.

சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் மூலவருக்கு பழக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.

Advertisement