1,000 கோரிக்கைகள் சொன்னாலும் நிறைவேற்றுவேன்! காட்டூர் மக்களிடம் செந்தில்பாலாஜி திட்டவட்டம்

கோவை: ''100 அல்ல; 1,000 கோரிக்கைகள் சொன்னாலும் உங்கள் வீட்டு பிள்ளையாக நிறைவேற்றித் தருவேன்,'' என்கிறார், தி.மு.க., வேட்பாளர் செந்தில் பாலாஜி.

கோவை தெற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, காட்டூர் பகுதி கழகத்துக்கு உட்பட்ட பிள்ளையார் கோவில் வீதி, குண்ணன் வீதி, கடலைக்கார சந்து, ஹைவே காலனி, சுந்தரேசன் லே-அவுட் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நடந்தே சென்று ஆதரவு திரட்டினார். அப்பகுதி பெண்கள், ரோட்டின் இருபுறமும் வரிசையாக நின்று மலர் துாவி வரவேற்றனர். ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டனர்.

கூட்டத்தில், செந்தில் பாலாஜி பேசியதாவது:

கோவைக்கு கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. கோவையின் அடையாளமாக செம்மொழி பூங்கா திகழ்கிறது. ஜி.டி.நாயுடு மேம்பாலப் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது. ரூ.250 கோடியில் மேற்குப்புறவழிச்சாலை பணி முடிந்திருக்கிறது. ரூ.300 கோடியில் காந்திபுரத்தில் அறிவுலகம் கட்டப்படுகிறது.

மாநகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்ய ரூ.8,700 கோடி ஒதுக்கப்பட்டது. 760 கோடியில் 1,706 கி.மீ., நீளத்துக்கு சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மழை நீர் வடிகால், தெருவிளக்கு, குடிநீர் திட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மகளிர் உரிமைத் தொகை, இலவச பஸ் பயணம், நான் முதல்வர் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், புதுமைப் பெண் திட்டம் ஒவ்வொரு இல்லத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.

83வது வார்டு மக்கள் கொடுத்த வாக்குறுதிகளை நன்கு அறிவேன். மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைந்ததும், பார்சிட் பகுதியில் புதிதாக ரேஷன் கடை அமைக்கப்படும். காளீஸ்வரர் நகரில் சமுதாய கூடம், சி.எம்.சி. காலனியில் பட்டா பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும், கிங்ஸ் திரையரங்கு அருகே பஸ் ஸ்டாப் அமைக்கப்படும் என்பதும மட்டுமல்ல; முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும். 100 அல்ல; 1,000 கோரிக்கைகள் வந்தாலும் நிறைவேற்றி தரும் உங்கள் வீட்டு பிள்ளையாக இருப்பேன். கோவை தெற்கு முன்மாதிரியான தொகுதியாக மாறும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

தொடர்ந்து, பிள்ளையார் கோவில் வீதியில், தி.மு.க., மாநில மாணவரணி முன்னாள் துணை செயலாளர் கணேஷ்குமார் ஏற்பாட்டில், பா.ஜ., இளைஞரணியினர் தி.மு.க.,வினர் இணைந்தனர்.

Advertisement