மேகதாது அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

2

-டில்லி சிறப்பு நிருபர்-

'மேகதாது அணை தொடர்பான வழக்கை மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்' என, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.


காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் வேலைகளை கர்நாடக அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக அரசு அவ்வப்போது உச்ச நீதிமன்றத்தை நாடி அந்த முயற்சிகளை தடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக மேகதாது அணை தொடர்பாக திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடகா அரசுக்கு தடை விதிக்கக்கோரி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க மறுத்து கடந்தாண்டு தீர்ப்பளித்தது.


இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு உடனடியாக தாக்கல் செய்யப்பட்டது. அந்த சீராய்வு மனு, நீதிபதிகள் வினோத் சந்திரன், விபுல் பஞ்சோலி ஆகியோரின் அறையில் வைத்து நாளை மறுநாள் விசாரிக்க பட்டியலிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞரான கிருஷ்ணமூர்த்தி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த அமர்வில் ஆஜராகி ஒரு முக்கியமான முறையிட்டை இன்று முன் வைத்தார்.


அதில், 'மேகதாது அணை தொடர்பான சீராய்வு மனுவை நீதிபதியின் சேம்பரில் விசாரிக்காமல், வழக்கமான நடைமுறையின்படி நீதிமன்ற அறையில் விசாரிக்க வேண்டும். ஏனெனில் இந்த விவகாரத்தில் விரிவான வாதங்கள் எடுத்து வைக்க வேண்டி உள்ளது' என, கோரிக்கை வைத்தார். அதைக் கேட்டுக் கொண்ட தலைமை நீதிபதி, இந்த கோரிக்கையை பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.

Advertisement