கிணத்துக்கடவு தொகுதி தேர்தல் அதிகாரி மீது புகார்
கோவை:கிணத்துக்கடவு தொகுதியில் 43 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 5 பேரின் வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டது. சுயேச்சையாக தாக்கல் செய்திருந்த அனைவரின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த மாசாணமுத்து என்பவர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அளித்துள்ள புகார்;
நான் கிணத்துக்கடவு தொகுதிக்கு சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தேன். என்னுடன் சேர்ந்து அனைத்து சுயேச்சைகளின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. கிணத்துக்கடவு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கிறார். வேட்புமனுவை நிராகரிக்கும்போது முதலில் சில கட்டங்களை சரியாக நிரப்பவில்லை என்று கூறினர்.
நிராகரிப்புக்கான காரணங்களை ஆய்வு செய்தபோது 200 ரூபாய் முத்திரை தாளில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்று கூறியுள்ளனர். இந்த விளக்கத்தில் முரண்பாடு உள்ளது. கிணத்துக்கடவு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியை மாற்றினால் தான், அங்கு நியாயமான முறையில் தேர்தல் நடைபெறும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.