தி.மு.க.,வுக்கு பெண்கள் அமோக ஆதரவு: வால்பாறை தி.மு.க., வேட்பாளர் பெருமிதம்
வால்பாறை: ''மக்களுக்காக சிந்தித்து திட்டங்களை செயல்படுத்தியது தான் தி.மு.க., அரசின் சாதனையாகும்,'' என, வால்பாறை தி.மு.க., வேட்பாளர் சுதாகர் தெரிவித்தார்.
வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வால்பாறை, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் குட்டி என்ற சுதாகர், பொதுமக்களிடம் பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு ஆனைமலை நகர செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் யுவராஜ், எஸ்.யுவராஜ், மற்றும் நிர்வாகிகள் பாஸ்கர், பால்பாண்டி, பொன்னுசாமி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரவேற்பு கொடுக்கின்றனர். பொதுமக்களிடம் தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கி கூறி, துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரம் செய்து வருகிறார்.
வால்பாறை தி.மு.க., வேட்பாளர் குட்டி என்ற சுதாகர் பேசியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின், மக்களுக்காக சிந்தித்து, பல நலத்திட்டங்களை ஐந்தாண்டுகளில் செயல்படுத்தி சாதனை படைத்துள்ளார். ஒவ்வொரு திட்டமும், மக்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்காக செயல்படுத்தப்பட்டது. ஐந்தாண்டு கால ஆட்சியின் சாதனைகளால், ஓட்டு சேகரிக்க செல்லும் இடங்களில் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர்.
பெண்களின் முன்னேற்றத்துக்காக, மகளிர் உரிமைத்தொகை, பணிபுரியும் மகளிர் நலன் காக்க 18 இடங்களில் தோழி விடுதி, விடியல் பயண திட்டம் வாயிலாக தினமும், 58 லட்சம் மகளிர் பயணம், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பெண்களுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சி தான். இதனால், பெண்கள், தி.மு.க.,வுக்கு அமோக ஆதரவு அளிக்கின்றனர். திராவிட மாடல் 2.O ஆட்சிக்கு வந்ததும், மகளிர் உரிமைத்தொகை, 2,000 ரூபாயாக உயர்த்தப்படும்; இல்லத்தரசி கூப்பன், 8000 ரூபாய் என பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த முறை சொன்னதை செய்து காட்டிய முதல்வர் ஸ்டாலின், மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், தேர்தல் அறிக்கையில் தெரிவித்த திட்டங்களை செயல்படுத்துவார்.
இவ்வாறு, பேசினார்.