கரும்பு விவசாயிகளை கண்டுகொள்ளாத தி.மு.க., ;அ.ம.மு.க., சண்முகவேலு குற்றச்சாட்டு
உடுமலை: கரும்பு விவசாயிகள் தொடர் பிரச்னைகளை சந்தித்தும் கண்டுகொள்ளாத தி.மு.க., அரசால், அச்சாகுபடியே காணாமல் போகும் நிலை ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து வருகின்றனர் என மடத்துக்குளம் அ.ம.மு.க., வேட்பாளர் சண்முகவேலு பேசினார்.
மடத்துக்குளம் தொகுதியில் அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில், அ.ம.மு.க., சார்பில் சண்முகவேலு போட்டியிடுகிறார். கூட்டணி கட்சியினரோடு, கிராமங்களில் தீவிர பிரசாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
மடத்துக்குளம் பகுதியில் அவர் பேசியதாவது: மடத்துக்குளம் பாசன பகுதிகளில் கரும்பு பிரதான சாகுபடியாக உள்ளது. சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்தும், கரும்புக்கு உரிய விலை கிடைப்பதில்லை.
கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, கரும்பு டன்னுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியிட்டது. ஆனால், ஆதார விலையை உயர்த்தவே இல்லை.
ஐந்தாண்டுகளாக கரும்பு விவசாயிகள் பிரச்னையை கண்டுகொள்ளாத தி.மு.க., இந்த தேர்தலில் மீண்டும் கரும்புக்கான ஆதார விலையை உயர்த்துவோம் என, விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர்.
தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையான அமராவதி ஆலை மூடப்பட்டு, பல ஆண்டுகளாகிறது.
மடத்துக்குளம் தொகுதியில், இந்த ஆலையை சார்ந்திருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், கரும்பு விவசாயிகள் நேரடியாக வாழ்வாதாரம் இழந்தும், தி.மு.க., அரசு கண்டுகொள்ளவில்லை.
சாகுபடி செலவு அதிகரித்து, ஆதார விலை உயராததால், ஒவ்வொரு ஆண்டும் கரும்பு விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டுள்ளதால், மடத்துக்குளம் பகுதியில் கரும்பு சாகுபடியாளர்கள் செய்வதறியாது கண்ணீர் விடுகின்றனர். பலர் மாற்றுச்சாகுபடிக்கு செல்வதால் கரும்பு விவசாயமே காணாமல் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த தேர்தலில், குக்கர் சின்னத்தில் வாக்களித்து, மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக உடுமலை மேற்கு ஒன்றியம் வல்லக்குண்டாபுரத்தில், தி.மு.க., வினர், அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க., வில் இணைந்தனர். மடத்துக்குளம் தொகுதி பொறுப்பாளர் ரங்கசாமி, மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
மேலும்
-
தேர்தல் பயிற்சி வகுப்புகளில் தபால் ஓட்டளித்த ஆசிரியர்கள்: கட்டாயப்படுத்தியதால் அதிருப்தி
-
பள்ளி கட்டடம் சேதம் :தகர செட்டில் வகுப்பறை
-
மேற்கு தொகுதியில் பட்டா பிரச்னைக்கு தீர்வு: வேட்பாளர் பாலாஜியை ஆதரித்து அமைச்சர் மூர்த்தி பிரசாரம்
-
தி.மு.க., ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து சிதம்பரம் பிரசாரம்
-
கழிப்பறை வசதி இல்லா ஓட்டுச்சாவடி
-
மராமத்து பணி துவக்கம்