ஆற்றில் குப்பை கொட்டினால் அபராதம்: பொதுமக்களுக்கு நகராட்சி எச்சரிக்கை

வால்பாறை: வால்பாறையில் உள்ள நீர்நிலைகளில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என, நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை நகராட்சியில் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வீடு தோறும் குப்பை சேகரிக்கப்படுகிறது. வீடு மற்றும் கடைகளில் சேகரிக்கப்படும் குப்பை உள்ளிட்ட கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு, ஸ்டேன்மோர் ரோட்டில் உள்ள குப்பைக்கிடங்கில் சேமித்து வைக்கப்படுகிறது.

நகரை துாய்மையாக வைக்க நகராட்சி நிர்வாகம் பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில், நகரில் ஆற்றை ஒட்டி வீடு கட்டி வசிப்பவர்கள், தங்கள் வீடுகளில் வெளியாகும் குப்பை உள்ளிட்ட கழிவுகளை, ஆற்றில் கொட்டுகின்றனவர். இதனால் நீர்நிலைகள் மாசுபடுவதோடு, சுகாதார சீர்கேடும் நிலவுகிறது.

நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

வால்பாறை நகரில் குடியிருப்பின் மத்தியில், சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒன்றான, நடுமலை ஆறு, வாழைத்தோட்டம், டோபி காலனி வழியாகவும், காமராஜ்நகர் முதல் சிறுவர்பூங்கா வரையிலான குடியிருப்பை ஒட்டி மற்றொரு ஆற்றும் சென்று சோலையாறு அணையில் கலக்கிறது.

இந்த இரண்டு ஆறுகளையொட்டி வசிக்கும் மக்கள், வீடுகளில் வெளியாகும் கழிவுகளை ஆற்றில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.

சமவெளிப்பகுதியில் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக பயன்படுத்தும் இந்த ஆற்று நீரில், கழிவுகள் கலப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தவறும்பட்சத்தில் ஆறுகளில் கழிவு மற்றும் குப்பைக்கழிவுகளை வீசுபவர்களுக்கு, அதிகபட்சமாக, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement