திருமண மேடையானது தேர்தல் பிரசார மேடை  காட்டுமன்னார்கோவிலில் சுவாரசியம் 

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார் கோவிலில், பிரசாரத்தின் இடையில், திருமாவளவன் இளைஞர் ஒருவருக்கு திருமணம் நடத்தி வைத்த சம்பவம் அரங்கேறியது.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தனி தொகுதியில், நேற்று முன்தினம் இரவு, தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் பன்னீர்செல்வம், வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

தேர்தல் ஆணைய உத்தரப்படி, இரவு 10:00 மணிக்குள் பிரசாரத்தை முடிக்க வேண்டும் எனும் பரபரப்பில் அனைவரும் இருந்தனர். அப்போது, நடுத்திட்டு கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவர் தனது துணையுடன், திடீரென மேடையேறினார்.

'தங்கள் முன்னிலையில் தான் எங்கள் திருமணம் நடைபெற வேண்டும்' என, அவரிடம் திருமாவளவனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

உடனுக்குடன் இருவரும் மாலை மாற்றிய நிலையில், திருமாவளவன் தாலி எடுத்து கொடுக்க, அங்கு திருமணம் நடந்தது. இந்த சம்பவம், பார்வையாளர்கள் கவனத்தை கவர்ந்தது.

Advertisement