'மாதிரி' டோக்கன் வழங்குவதில் போட்டா போட்டி :இரு கட்சியிலும் பூத் கமிட்டிகளுக்கு தாராளம்

பொள்ளாச்சி: தி.மு.க., அறிவித்துள்ள ரூ.8,000 பரிசு கூப்பனுக்கான, 'மாதிரி' டோக்கனை வழங்கி வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அ.தி.மு.க. தாங்கள் அறிவித்துள்ள, ரூ.10,000 உதவி தொகைக்கான டோக்கனை வழங்க உள்ளனர். இவை, 'மாதிரி டோக்கன்' என்றாலும் மக்களிடம் அது உண்மையான டோக்கன் தான் என்கிற மனநிலை ஏற்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டம், மாநில அளவில் உற்று கவனிக்கப்படுகிறது. ஓட்டுப்பதிவுக்கு, ஒன்பது நாட்களே இருப்பதால் அரசியல் களம், உச்சகட்ட பரபரப்பில் உள்ளது.

தேர்தல் பணிகளில் ஒவ்வொரு கட்சிக்கும் பூத் கமிட்டிதான் முதுகெலும்பாக செயல்படும். பிரசாரம், பணப்பட்டுவாடா உள்ளிட்டவற்றுக்கு பூத் கமிட்டி அவசியம். தேர்தல் பணிக்காக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. பூத் கமிட்டிக்கு பணம் கொடுக்க துவங்கியுள்ளன.

தி.மு.க. சார்பில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பூத் கமிட்டிகளுக்கும் 2 தவணை முறையில் ரூ.10,000 வீதம் 20,000 வழங்கியுள்ளனர். தேர்தல் முடிவதற்குள் மேலும் 3 முறை பணம் வழங்க திட்டமிட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில், 3,563 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இந்த ஒவ்வொரு பூத்துக்கும் தலா ரூ.75,000 வழங்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது. தி.மு.க. பகுதி, நகரம், ஒன்றிய செயலாளர்களுக்கு தலா ரூ.2 லட்சம், வார்டு செயலாளர்களுக்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. சார்பில் தற்போதுவரை பூத் கமிட்டிகளுக்கு ரூ.5,000 வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவதற்குள் பூத் கமிட்டிக்கு ரூ.50,000 முதல் 60,000 வரை வழங்க திட்டமிட்டுள்ளனர். அ.தி.மு.க. பகுதி, நகரம், ஒன்றிய செயலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம், வார்டு செயலாளர்களுக்கு ரூ.50,000 வழங்கியுள்ளனர்.

தி.மு.க. சார்பில் ரூ.8,000 பரிசு கூப்பன் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். வீடு வீடாக சென்று தி.மு.க.வினர் பரிசு கூப்பனுக்கான மாதிரி டோக்கன் வழங்கி வருகின்றனர். அது, மாதிரி டோக்கன் என்றாலும் மக்களிடம் அது உண்மையான டோக்கன் என்கிற மனநிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. குடும்பத்திற்கு ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று ஏற்கனவே வாக்குறுதி கொடுத்துள்ளனர். தி.மு.க.வை போலவே அ.தி.மு.க.,வினரும் வீடு வீடாக சென்று ரூ.10,000க்கான மாதிரி டோக்கன் வழங்க முடிவு செய்துள்ளனர். எது எப்படியோ, வாக்காளர் காட்டுல மழை!

Advertisement