வக்கீலை செருப்பால் அடித்த பெண் இன்ஸ்., மீது வழக்கு பதிய உத்தரவு 

பெங்களூரு: போலீஸ் நிலையத்தில் ஏற்பட்ட தகராறில், பெண் வக்கீலை செருப்பால் தாக்கிய, பெண் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்ய, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பெங்களூரு மைக்கோ லே - அவுட்டில் வசிப்பவர் நபோனிதா. வக்கீல். கடந்த ஆண்டு பிப்ரவரி 23 ம் தேதி காரில் சென்றார்.

சாலையில் முன்னால் சென்ற ஆட்டோவை முந்தி சென்ற போது, ஆட்டோ டிரைவருக்கும், நபோனிதாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபம் அடைந்த ஆட்டோ டிரைவர், கார் மீது கல் வீசியதில் கண்ணாடி உடைந்தது.

இதுபற்றி புகார் அளிக்க மைக்கோ லே - அவுட் போலீஸ் நிலையத்திற்கு, நபோனிதா சென்றார். இரண்டு மணி நேரம் ஆகியும், அவரது புகாரை ஏற்காமல் போலீசார் அலட்சியப்படுத்தினார். இதனால் கோபம் அடைந்த அவர் பணியில் இருந்த, போலீசாருடன் வாக்குவாதம் செய்ததுடன், மேஜையில் இருந்த ஆவணங்களை துாக்கி வீசினார்.

பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் பத்மாவதியுடன் தகராறு செய்தார். கோபம் அடைந்த இன்ஸ்பெக்டர், வக்கீலை தாக்கியதுடன், செருப்பால் அடித்தார். போலீஸ் நிலையத்தில் அத்துமீறி நுழைந்து பிரச்னை செய்ததாக, வக்கீல் மீது வழக்குப்பதிவானது. தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இம்மனுவை நீதிபதி நாகபிரசன்னா விசாரித்தார்.

இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறினார். வக்கீலை செருப்பால் தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது, அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இன்ஸ்பெக்டர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று, கேள்வி எழுப்பியதுடன், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவும் அரசுக்கு உத்தரவிட்டார்.

அதே நேரம் மனுதாரரான வக்கீல் பொறுப்பான நபர்; அவர் போலீஸ் நிலையத்தில் நடந்து கொண்ட விதம் சரியில்லை என்று, ஆட்சேபனை தெரிவித்த நீதிபதி, அவர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டார்.

Advertisement