தேர்தலில் விஜய்க்கு ஈர்ப்பு இருப்பது உண்மைதான்; மா.கம்யூ., பாலகிருஷ்ணன் ஒப்புதல்
விழுப்புரம்: இந்த தேர்தலில் நடிகர் விஜய்க்கு ஈர்ப்பு இருப்பது உண்மை தான், ஆனால் அது தி.மு.க., கூட்டணியை பாதிக்காது' என மா.கம்யூ., அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் பிரசாரத்திற்காக வந்திருந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியா எப்படியிருக்க வேண்டும் என்ற மிக உயர்ந்த அரசியல் சாசனத்தை அமைத்தவர் அம்பத்கர். மத்திய அரசு, மாநில அரசு என்ற கூட்டாட்சி தத்துவத்தை வகுத்தவர். இப்படி, நாட்டின் மதச்சார்பற்ற உன்னதமான குறிக்கோளை, தற்போதுள்ள மத்திய பா.ஜ., அரசு வீணாக்கி வருகிறது.
இட ஒதுக்கீட்டை படிப்படியாக குறைத்து, இல்லை என்கிற நிலையை உருவாக்கி வருகின்றனர்.
உயர்கல்வி முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில், மும்மொழிக் கொள்கையை திணிக்கின்றனர். இதனை எதிர்த்தும், நாட்டின் பன்முகத்தன்மையை காப்பாற்ற, பா.ஜ., கூட்டனை வீழ்த்தவும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைத்துள்ளோம். இந்தத் தேர்தலிலும் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெறும்.
இந்த தேர்தலில் நடிகர் விஜய் மீது ஒரு ஈர்ப்பு இருப்பது உண்மைதான். ஒரு புதிய அரசியல் கட்சி களத்திற்கு வரும் போது, ஈர்ப்பு இருக்கும் என்பது இயல்புதான். ஆனால், அந்த ஈர்ப்பு, தி.மு.க., போன்ற பெரிய கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. எதிரணியினர் பிரிந்து கிடப்பதால், அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.