தேர்தல் பணியிடும் 19,272 அரசு ஊழியருக்கு தபால் ஓட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, 19,272 பேருக்கு தபால் ஓட்டு வழங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும், பொதுத்தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் பல்வேறு அரசு துறை ஊழியர்கள், 19,272 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், 5,200 காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய உள்ள அரசு துறை ஊழியர்கள் அனைவருக்கும், முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், அவர்களுக்கு தபால் ஓட்டுக்களுக்கான 'படிவம் - 12' வழங்கப்பட்டு உள்ளது. இன்று, 10 தொகுதிகளிலும் நடைபெற உள்ள இரண்டாம் கட்ட பயிற்சி மையங்களில் பதிவு செய்யப்பட்ட தபால் ஓட்டுகள் பெறப்பட உள்ளது.

அதை தொகுதி வாரியாகவும், பிற மாவட்டங்களில் இருந்து பணிக்கு வந்தவர்களின் ஓட்டுகளை, மாவட்டம் வாரியாகவும் பிரித்து, 'ஸ்ட்ராங் ரூமில்' வைக்கப்படும். ஓட்டுப்பதிவு நடைபெறும், வரும் 23ம் தேதி இரவு, அந்த ஓட்டு பெட்டிகள், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக, மாவட்ட தேர்தலும், கலெக்டருமான பிரதாப் தெரிவித்துள்ளார்.

Advertisement