அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் பேச்சு! பரிசீலனையில் உள்ளது 2 இடங்கள்

4

வாஷிங்டன்: அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் அமைதி பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக, இரண்டு இடங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும் - இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்., 28ம் தேதி முதல் போர் தொடுத்து வருகின்றன. உலக நாடுகள் வலியுறுத்தியதை தொடர்ந்து, தற்காலிகமாக, இரண்டு வார போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் சமீபத்தில் பேச்சு நடந்தது. தொடர்ந்து, 21 மணி நேரம் நடந்த பேச்சு, எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

தடை



இதை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்நிலையில், தன் கோரிக்கைகளுக்கு இணங்க ஈரான் தயாராக இருந்தால், விரைவில் மீண்டும் அமைதி பேச்சை தொடங்க தயாராக இருப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.

வரும், 21ம் தேதியுடன் தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வர உள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்காவும், ஈரானும் புதிய அமைதி பேச்சை நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது-.

இரண்டாம் கட்ட அமைதி பேச்சுக்கான முயற்சியையும் பாகிஸ்தானே மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

மத்தியஸ்தர்



இரண்டாம் கட்ட அமைதி பேச்சுக்கான இடம் மற்றும் நேரம் இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்படும் நிலையில், பேச்சுவார்த்தை நாளை நடைபெறலாம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.

புதிய சுற்று பேச்சு நடத்துவதற்கு சாத்தியமான இடங்களாக பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவா ஆகியவை பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் தொடர்ந்து முதன்மை மத்தியஸ்தராக செயல்படும் என கூறப்படுகிறது-.

@block_B@

சீனாவின் நான்கு அம்ச திட்டம்!



ஈரான் - அமெரிக்கா இடையே இரண்டாம் கட்ட பேச்சு நடத்த பரிசீலனை நடந்து வரும் நிலையில், மேற்காசிய போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நான்கு அம்ச அமைதி திட்டத்தை சீனா முன்மொழிந்துள்ளது.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சையது அல் நஹ்யானை, சீன அதிபர் ஷீ ஜின்பிங் நேற்று சந்தித்தார். அப்போது, மேற்காசிய பிராந்தியத்துக்கான நான்கு அம்ச அமைதி திட்டத்தை ஜின்பிங் முன்மொழிந்தார். பாகிஸ்தானில் நடந்த அமைதி பேச்சு தோல்வியடைந்த 48 மணி நேரத்திற்கு பிறகும், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட துவங்கியுள்ள நிலையிலும் இந்த முன்மொழிவு மிக முக்கியமான தருணத்தில் வந்துள்ளது.

ஷீ ஜின்பிங் முன்மொழிந்துள்ள அமைதி திட்டத்தில், அமைதியான சுகவாழ்வு, இறையாண்மைக்கு மரியாதை, ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு, சர்வதேச சட்டத்தை கடைப்பிடித்தல் ஆகியவற்றை வலியுறுத்திஉள்ளார்.block_B

Advertisement