இளைஞர்களைக் கவர பிள்ளைகளை பிரசாரத்தில் இறக்கும் வேட்பாளர்கள்: அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் ‛‛ரெடி''

6

நமது சிறப்பு நிருபர்




எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் சில தொகுதிகளில் வேட்பாளர்களின் பிள்ளைகள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். பொதுவாக தலைவர்கள் அல்லது பெரியவர்கள் தான் தேர்தல் பிரசாரங்களில் வலம் வருவது வழக்கம். இந்த தேர்தலில் சில வேட்பாளர்கள் தங்கள் பிள்ளைகளையும் தீவிர பிரசாரத்தில் இறக்கி விட்டுள்ளனர். இதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது, மதுரை திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தான். இவர் தான் போகும் இடங்களில் எல்லாம் தனது மகளையும் அழைத்துச் சென்றார்.

பல இடங்களில் மகளையும் பேசவிட்டார். இந்த உத்தி பலரையும் கவர்ந்தது. தந்தைக்காக மகள் வேகாத வெயிலில் காய்ந்து, பிரசாரம் செய்ததை பல பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர். தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிடும் சவும்யாவும் தனது மகள்களை களத்தில் இறக்கி விட்டுள்ளார். இவரது 2 மகள்களும் வீடு வீடாக சென்று அம்மாவுக்காக தீவிர பிரசாரம் செய்கின்றனர். கோவை வடக்கு தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிடும் வானதி, உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தாய்க்குப் பதில் வானதியின் மகன் அந்த தொகுதியில் பிரசாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்.



திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் போட்டியிடுகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளார். திருப்பத்துார் தொகுதி திமுக வேட்பாளர் கவிதா தண்டபாணியின் மகளும் மகனும் வாக்காளர்களின் காலில் விழுந்து ஓட்டுக் கேட்கின்றனர். காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் துரைமுருகனின் மருமகள் தீவிர பிரசாரத்தில் இறங்கி மாமனாருக்காக ஓட்டுக் கேட்டு வருகிறார்.இப்படி சில வேட்பாளர்கள் தங்கள் பிள்ளைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்தியதற்கு இன்னொரு முக்கியமான காரணம், இளைஞர்களின் ஓட்டுகளை குறி வைத்து தான்.



30 வயதுக்குட்பட்ட இளைஞர்களை கவர வேண்டும் என்றால் இளைஞர்கள் பிரசாரம் செய்தால் சரியாக இருக்கும் என இந்த வேட்பாளர்கள் நினைக்கின்றனர். இளைஞர்கள் பிரசாரம் செய்யும்போது அதைக் கேட்கும் இளஞைர்களும் இளைஞிகளும் பிரசாரம் செய்வோருடன் தங்களை எளிதாக பொருத்திக்கொள்கின்றனர். அது மட்டுமல்லாமல், பல வேட்பாளர்கள், தங்கள் தேர்தல் வரவு, செலவுகளைக் கவனிக்கும் பொறுப்பை பிள்ளைகள் வசம் கொடுத்துள்ளனர். வேறு யாரையும் நம்ப இவர்கள் தயாராக இல்லை. இப்படி, அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் மறைமுகமாக உருவாகின்றனர்.

Advertisement