ஆடு பகை... குட்டி உறவு! குமாரசாமி திட்டம் என்ன?

ம.ஜ.த., மூத்த தலைவர் ஜி.டி.தேவகவுடாவின் செயல்பாடுகளால் அதிருப்தியில் உள்ள கட்சி தலைமை, அவரின் மகனிடம் அன்யோன்யமாக இருப்பது, கட்சி தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மைசூரு அரசியல் தலைவர்களில் சக்தி வாய்ந்தவர்களாக காங்கிரசின் முதல்வர் சித்தராமையாவும், ம.ஜ.த.,வின் ஜி.டி.தேவகவுடாவும் உள்ளனர். கட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, கட்சியின் எந்த கூட்டம், ஆலோசனையிலும் பங்கேற்பதை தேவகவுடா தவிர்த்து வந்தார். அதேவேளையில், முதல்வர், துணை முதல்வர் உட்பட காங்கிரஸ் தலைவர்களுடன் நெருக்கம் காண்பித்து வந்தார். இது கட்சி தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

அதேவேளையில், ஜி.டி.தேவகவுடாவுக்கும், அவரது மகன் ஹரிஷ் கவுடாவுக்கும் இடையே கடந்த சில காலமாக மனக்கசப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த மனக்கசப்பை போக்க, கட்சி தலைமை ஈடுபடும் என தொண்டர்கள் நினைத்தனர்.

தொண்டர்கள் இவ்வாறு நினைப்பதற்கு காரணம், முன்னர் இது போன்று பெரியபட்டணாவில் முன்னாள் எம்.எல்.ஏ., மகாதேவாவுக்கும், அவரது மகன் பிரசன்னாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனை ம.ஜ.த.,வின் எஸ்.ஆர்.மகேஷ் மத்தியஸ்தம் செய்து, தந்தை - மகன் இடையேயான கருத்து வேறுபாட்டை சரி செய்தார்.

ஆனால், ஜி.டி.தேவகவுடா - ஹரிஷ் கவுடா விஷயத்தில், ம.ஜ.த., எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருவது, கட்சி தொண்டர்கள் இடையே குழப்ப த்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் மைசூரு சென்றிருந்த குமாரசாமி, அவரது மனைவி அனிதா, ஹரிஷ் கவுடா அழைப்பின் பேரில் அவரின் வீட்டுக்கு சென்றனர். அங்கு அனைவரும் இரவு விருந்து சாப்பிட்டு, குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் -:

Advertisement