பிரதமரை 'பயங்கரவாதி' என அழைத்த கார்கேவுக்கு நோட்டீஸ்! 24 மணி நேரத்தில் பதிலளிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு

6

- நமது டில்லி நிருபர் -

பிரதமர் நரேந்திர மோடியை 'பயங்கரவாதி' என, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைத்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து, 24 மணி நேரத்தில் பதிலளிக்கும்படி, அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, சென்னையில் நேற்று முன்தினம் நடந்த பிரசார கூட்டத்தில் காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியை பயங்கரவாதி என விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையானது. இதற்கு மத்திய அமைச்சர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து விளக்கம் அளித்த கார்கே, 'பிரதமர் மோடியை நேரடி பொருளில் பயங்கரவாதி என, நான் கூறவில்லை. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை அவர் பழிவாங்குகிறார். எதிர்க்கட்சிகளையும், ஜனநாயக அமைப்புகளையும் அவர் அச்சுறுத்துவதால், அப்படி கூறினேன்' என்றார். எனினும் இதை பா.ஜ., தலைவர்கள் ஏற்கவில்லை.

இந்நிலையில், பிரதமர் மோடியை பயங்கரவாதி என, கார்கே விமர்சித்த விவகாரத்தில் அவர் மீது நடவடிக்கை கோரி, தலைநகர் டில்லியில் உள்ள தேர்தல் கமிஷனில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் தலைமையிலான அக்கட்சி நிர்வாகிகள் புகார் அளித்தனர்.

தேர்தல் கமிஷன் அதிகாரிகளுடனான சந்திப்புக்கு பின், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ''திட்டமிட்டு பிரதமர் மோடியை பயங்கரவாதி என, கார்கே அழைத்துள்ளார். இது அருவருக்கத்தக்கது.

''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை இவ்வாறு அழைப்பது, ஜனநாயக முறையை அவமதிப்பதாகும். தமிழகம், மேற்கு வங்க சட்டசபை தேர்தல் தோல்வி பயத்தால், பிரதமர் மீது கார்கே வெறுப்பை காட்டி உள்ளார்,'' என்றார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து, 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்கும்படி மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

@quote@மன்னிப்பு கேட்கணும்!

நாட்டு மக்களிடம் கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும். இனி யாரும், நாட்டின் பிரதமரை பயங்கரவாதி என, அழைக்க துணியாத வகையில் தேர்தல் கமிஷன் முன்மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கிரண் ரிஜிஜு, மத்திய அமைச்சர், பா.ஜ.,quote

@quote@மக்கள் பதிலளிப்பர்!

பிரதமர் மோடியை பயங்கரவாதி என அழைத்து, தேசத்திற்கே கார்கே அவமானத்தை ஏற்படுத்தி விட்டார். ஒவ்வொரு முறையும் காங்கிரஸ், மோடியை வசை சொற்களால் தாக்கும் போதும், நாட்டு மக்களே அதற்கு பதில் அளிக்கின்றனர். இந்த முறையும் மக்கள் பதிலளிப்பர்.

- அமித் ஷா, மத்திய அமைச்சர், பா.ஜ.,quote

@quote@அவமதிப்பு!

இது, ஒரு தனிநபரை குறித்த கருத்து மட்டுமல்ல, 140 கோடி மக்களின் ஆணையை அவமதிக்கும் செயலாகும். இது போன்ற தரம் தாழ்ந்த அறிக்கைகள், காங்கிரசின் விரக்தியை பிரதி பலிக்கின்றன. இதற்காக காங்கிரசும், ராகுலும், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

- நிதின் நபின், பா.ஜ., தேசிய தலைவர்quote

Advertisement