இப்படி அவமதிக்கலாமா?

'மக்கள் பணி செய்ய முடியாவிட்டால், அரசியலை விட்டே ஒதுங்க வேண்டியது தானே...' என, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவை கிண்டல் அடிக்கின்றனர், தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியினர்.

தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ், முதல்வராக இருந்தார்.

சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால், சந்திரசேகர ராவ், இப்போது அரசியல் செய்ய முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்; உடல்நிலையும், அவரை படுத்தி எடுக்கிறது.

கட்சியை நிர்வகிக்கும் பொறுப்பை, தன் மகன் கே.டி.ராமாராவிடம் கொடுத்து விட்டு, சத்தமில்லாமல் வீட்டில் ஓய்வெடுத்து வரும் சந்திரசேகர ராவை, காங்கிரஸ் கட்சியினர் வெறுப்பேற்றி வருகின்றனர்.

கடந்த, 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், கேஜ்வெல் என்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராவ், அதன்பின், தொகுதி பக்கமே தலைவைத்து படுக்கவில்லை.

இதை வைத்து அரசியல் செய்ய நினைத்த காங்., கட்சியினர், சந்திரசேகர ராவ் போல ஒரு பொம்மையை ஏற்பாடு செய்து, அந்த பொம்மையிடம், கேஜ்வெல் தொகுதி மக்கள், தங்கள் குறைகளை முறையிடுவது போல் ஏற்பாடு செய்திருந்தனர்.

பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியினரோ, 'உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள ஒரு தலைவரை, இப்படி அவமானப்படுத்தலாமா...?' என, கொந்தளிக்கின்றனர்.

Advertisement