சொந்த ஊர்களில் ஓட்டு போட ஆர்வம்; 2 நாட்களில் 9 லட்சம் பேர் பயணம்

தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, சென்னையில் இருந்து தினமும் இயக்கக்கூடிய, 2,092 பஸ்களுடன், 5,574 சிறப்பு பஸ்கள் என, 21, 22, 23ம் தேதிகளில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டன.

சொந்த ஊர்களில் ஓட்டு உள்ள மக்கள், கடந்த இரண்டு நாட்களாக, தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

இதனால், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும், கிளாம்பாக்கம், கோயம்பேடு, பஸ் நிலையங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பண்டிகை காலம் போல், முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவியது.

இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'பயணியரின் தேவைக்கு ஏற்ப, சென்னையில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இன்று மதியம் வரை, கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்துள்ளோம். சென்னையில் இருந்து, 21, 22ம் தேதிகளில், நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளனர்.

'இதேபோல், தேர்தல் முடிந்து, சென்னை போன்ற நகரங்களுக்கு திரும்பும் வகையில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் இருந்து, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவைக்கு செல்லும் வழக்கமான விரைவு ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களில், இரண்டு நாட்களில், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவைக்கு இயக்கப்பட்ட ஆம்னி பஸ்களில், இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளனர்.

Advertisement