மகளை கொன்று தாய் தற்கொலை: பண கஷ்டத்தால் விபரீத முடிவு

ஒயிட்பீல்டு: தன் 14 வயது மகளை கொலை செய்த தாய், தானும் தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு, ஒயிட்பீல்டின் இம்மடிஹள்ளியில் வசிப்பவர் சந்திரசேகர், 45. இவரது மனைவி சுவர்ணா, 40. தம்பதிக்கு காருண்யா, 17, என்ற மகள் உள்ளார்.

சந்திரசேகர், நேற்று காலையில் வழக்கம் போன்று, பணிக்கு சென்றிருந்தார். 11:00 மணியளவில் மனைவிக்கு போன் செய்தார். பல முறை போன் செய்தும் எடுக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த சந்திரசேகர், தன் சகோதரனுக்கு போன் செய்து, வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார். அவரும் வீட்டுக்கு வந்து பார்த்த போது, சுவர்ணா மகளை கொன்றுவிட்டு, தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், சந்திரசேகருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து அங்கு வந்த ஒயிட்பீல்டு போலீசார், உடல்களை மீட்டனர். வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.

சந்திரசேகருக்கு சமீபத்தில், இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. லட்சக்கணக்கான ரூபாய் செலவானது. இதனால் பொருளாதார பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான சுவர்ணா, மகளை கழுத்தை நெரித்து, கொலை செய்து விட்டு தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

சுவர்ணாவின் அக்கா உஷா கூறியதாவது:

என் தங்கை பணப்பிரச்னையால், மிகவும் அவதிப்பட்டார். என்னிடம் கூறி வருந்தினார். எங்கள் வீடு அத்திப்பள்ளியில் உள்ளது.

ப்ரீ டிக்கெட்டில், பஸ்சில் இலவசமாக பயணித்து என்னை பார்க்க வருவார். பணக்கஷ்டத்தை சமாளிக்க முடியாமல், மன அழுத்ததுக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொண்டார் என, நினைக்கிறோம். ஆனால் மகளை கொலை செய்தது வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement