மாண்டியாவில் இன்று 'ஸ்ரீ குரு பைரவைக்கிய கோவில்' திறப்பு பிரதமர் நரேந்திர மோடி வருகை

மாண்டியா: ஆதிசுஞ்சனகிரி மடத்தில் 71வது மடாதிபதி பாலகங்காதர நாத சுவாமிகள் நினைவாக கட்டப்பட்டு உள்ள ஸ்ரீ குரு பைரவைக்கிய கோவிலை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

மாண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகாவில் ஆதிசுஞ்சனகிரி மடம் அமைந்துள்ளது. இங்கு மறைந்த மடத்தின் 71 வது மடாதிபதி ஸ்ரீ பாலகங்காதரநாத சுவாமிகள் நினைவாக, ஸ்ரீ குரு பைரவைக்கிய கோவில் கட்டப்பட்டு உள்ளது. இக்கோவில் திறப்பு விழா இன்று நடக்கிறது.

இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 7:15 மணிக்கு டில்லியில் இருந்து இந்திய விமானப்படையின் பி - 777 விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10:05 மணிக்கு பெங்களூரு எச்.ஏ.எல்., விமான நிலையத்தில் வந்திறங்குகிறார்.

பின், இங்கு தயாராக உள்ள ராணுவ ஹெலிகாப்டரில் 10:10 மணிக்கு புறப்பட்டு, 10:50 மணிக்கு மாண்டியா சென்றடைகிறார்.

அதன் பின், 11:00 மணிக்கு மறைந்த ஸ்ரீ பாலகங்காதரநாத சுவாமிகள் நினைவாக, சாளுக்கியர், ஹொய்சாலர், சோழர், கங்கை கால சிற்பங்களின் கலவையுடன் திராவிட பாணியில் கட்டப்பட்ட 'ஸ்ரீ குரு பைரவைக்கிய கோவிலை' பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

அதனை தொடர்ந்து, அங்குள்ள கால பைரவேஸ்வர சுவாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். பி.ஜி.ஏ., மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள கூட்டத்தில் பேசுகிறார்.

கட்டுப்பாடு கூட்டத்தை முடித்து கொண்டு, மதியம் 12:05 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, மாண்டியா ஹெலிபேடுக்கு 12:10 மணிக்கு காரில் திரும்புகிறார். அங்கிருந்து 12:15 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு, பெங்களூரு எச்.ஏ.எல்., விமான நிலையத்துக்கு 12:55 மணிக்கு வந்திறங்குகிறார்.

பிரதமர் வருகையை ஒட்டி, காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. எனவே, 9:00 மணிக்குள் தரிசனம் செய்துவிட்டு, செல்லும்படி மடத்தினர் கேட்டு கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் மாவட்ட கலெக்டர் குமார் வெளியிட்டு உள்ள அறிக்கை:

தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

அதுபோன்று, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், பெல்லுார் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 8 கி.மீ., சுற்றளவில் உள்ள அனைத்து மதுபான கடைகள், பார், ரெஸ்டாரென்டுகள் காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை மூட வேண்டும். பெல்லுார் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 12 கி.மீ., சுற்றளவில், எந்தவித ட்ரோன்களும் பறக்க கூடாது.

இவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடியின் வருகையை ஒட்டியும், கூட்டத்தில் பேசுவதை தொடர்ந்து, ஒரு லட்சம் பேர் கூடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமருக்கு பனாரஸ் மைசூரு பட்டு தலைப்பாகை



இன்று மாண்டியா வரும் பிரதமர் மோடி, பி.ஜி.எஸ்., மைதானத்தில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார். அப்போது அவருக்கு, மைசூரு சேவா அறக்கட்டளை சார்பில், 'நால்வடி சிவப்பு தலைப்பாகை' அணிவிக்கப்பட உள்ளது.

இந்த தலைப்பாகையின் சிறப்பு அம்சம், மைசூரு பட்டு, பனாரஸ் பட்டால் செய்யப்பட்டது. இதனை மைசூரை சேர்ந்த கலைஞர் நந்தன் சிங் வடிவமைத்து உள்ளார்.

மைசூரு மன்னர் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் அணிந்துள்ள தலைப்பாகை மாதிரியில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனை செய்து முடிக்க, அவருக்கு ஐந்து நாட்களாகி உள்ளது.

அவர் கூறுகையில், ''பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் அணிவிக்கப்படும் இந்த தலைப்பாகையை தயாரிப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. இரண்டாவது முறையாக அவருக்காக தலைப்பாகை தயாரிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. இத்தகைய வாய்ப்புகள், எங்களை போன்ற கலைஞர்களின் திறமையை அதிகரிக்கும்,'' என்றார்.

இதற்கு முன், பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கெம்பே கவுடா சிலை திறப்பின் போது, பங்கேற்ற பிரதமருக்கு, கெம்பே கவுடா அணிந்திருந்த தலைப்பாகை மாதிரியில், கலைஞர் நந்தன் சிங் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement