வேலை இல்லாதவர்கள் போராட வேண்டும்: குமாரசாமி ஆவேசம்

பெங்களூரு: ''கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம், முறைகேட்டில் சிக்கி உள்ளதால், ஒரு நியமனம் கூட அரசு செய்யவில்லை. வேலை இல்லாதவர்கள், தங்கள் உரிமைக்காக வீதிகளில் இறங்கி போராட வேண்டும். வழக்குகளை பற்றி கவலைப்பட வேண்டாம்,'' என மத்திய அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.

பெங்களூரில் ம.ஜ.த., அலுவலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மாநிலத்தில் வேலையின்மை தலைவிரித்தாடுகிறது. வெளிப்படையான ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள வேண்டிய கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம், முறைகேட்டில் சிக்கி உள்ளது.

கவலை வேண்டாம் இத்தகைய சூழ்நிலையில், வேலை இல்லாதவர்கள், தங்கள் உரிமைக்காக வீதிகளில் இறங்கி போராடுங்கள். போலீஸ் வழக்குகளுக்கு அஞ்சாதீர்கள். இந்த வழக்குகளை தீர்த்து வைப்பது எங்கள் பொறுப்பு. அரசுக்கு எதிராக, மாநிலம் முழுதும் போராட வேண்டும்.

கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அழுகி நாறுகிறது. அதை சுத்தம் செய்ய முதல்வர், தவறிவிட்டார். இளைஞர் களிடம், 60 முதல் 70 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவோம் என்று கூறியதை நிறைவேற்றவில்லை.

வாரத்தில் 2 நாள் வாரத்தில் இரண்டு நாட்கள் கர்நாடகாவில் இருப்பேன். கட்சியை வழிநடத்துவது மட்டுமின்றி, மக்கள் சார்பில் போராடுவேன். மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற, எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க வேண்டும்.

பெண்களுக்கு இடஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்பட்டால், அரசியல் களம் மாறும். மோடி தலைமையின் கீழ், பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தொகுதி மறுவரையறைக்கு பின், மாநிலத்தில் 42 லோக்சபா தொகுதிகள் உருவாகும். இத்தொகுதிகளிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்கும்.

பொய்யர் யார்? சித்தராமையா தொகுதியில் சாகர்கட்டே என்ற கிராமம் உள்ளது. கே.ஆர்., நகரில் இருந்து சாகர்கட்டே வரையிலான பாலம் கட்டுவதற்கு, எனது ஆட்சி காலத்தில் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அந்த பாலத்தை திறந்து வைத்த சித்தராமையா, தானே செய்ததாக கூறுகிறார்.

எங்கு சென்றாலும் வளர்ச்சி பணிகள் குறித்து பேசாமல், வாக்குறுதி திட்டங்களை பற்றி மட்டுமே பேசுகிறார். விதான் சவுதாவில் 'ஏசி' அறையில் அமர்ந்து கொண்டு, திட்டங்களை அறிவித்தால், மக்களின் துன்பம் தணியாது. சிறிய கிராமங்களுக்கு ஆட்சியாளர்கள் சென்று, அம்மக்களின் நிலையை நேரில் பார்க்க வேண்டும்.

விதான் சவுதா முன்புள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தால் மட்டும் போதாது. மாநிலத்தின் நிர்வாக அமைப்பு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement