கொடுமுடியில் பிளம்பர் கொலை போலீசார் விசாரணை துவக்கம்
ஈரோடு :கொடுமுடியில், உடலில் காயங்களுடன் பிளம்பர் கொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம், ஊஞ்சலுார் காவேரி நகரை சேர்ந்த அலாவுதீன் மகன் முகமது சாகித், 22, பிளம்பர். இவர், கொடுமுடி அரசு மருத்துவமனை காம்பவுண்ட் அருகே கடந்த, 13 காலை 9:00 மணியளவில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் பார்த்தபோது நெற்றியில் சிறு சிறு காயங்கள், கழுத்தில் கீரல், இரண்டு கால் முட்டிக்கு கீழ் ரத்த காயம், இடதுகை மணிக்கட்டு அருகே வீக்கம் இருந்தது.
கடந்த 12ம் தேதி இரவு முகமது சாகித் மற்றும் அவரது நண்பர்கள் இருவர், கொடுமுடி ரயில்வே பிளாட்பார்மில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு தகராறு செய்துள்ளனர்.
தகவல் அறிந்த ரயில்வே போலீசார் அங்கு வந்து, ரத்த காயங்களுடன் இருந்த முகமது சாகித்தை, 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த டாக்டர் கேட்ட போது, மதுபோதையில் கீழே விழுந்து விட்டதாக கூறி, வெளி நோயாளியாக முகமது சாகித் சிகிச்சை பெற்றார்.இந்நிலையில், கொடுமுடி அரசு மருத்துவமனை காம்பவுண்ட் அருகே, மறுநாள் இறந்த நிலையில் கிடந்துள்ளார். சந்தேக மரணம் என கொடுமுடி போலீசார் வழக்கு பதிந்தனர். உடலை பிரேத பரிசோதனைக்காக, பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் அறிக்கையில் கொலை என்பது உறுதியானது. இது தொடர்பாக கடந்த, 12ம் தேதி இரவு கொடுமுடி ரயில்வே ஸ்டேஷனில் முகமது சாகித்துடன் தகராறில் ஈடுபட்ட இருவர் குறித்து, கொடுமுடி போலீசார்
விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் முகமது சாகித் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என, போலீசார் சந்தேகப்படுகின்றனர்.