ஓட்டுச்சாவடி பணிகள் கண்காணிப்பு: நுண்பார்வையாளர்களுக்கு ஆலோசனை

விழுப்புரம்: விழுப்புரத்தில், தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். தேர்தல் பொது பார்வையாளர்கள் ஷாலினி பண்டிட், பாவ்சாஹேப் தாங்கடே, ஓம்பிரகாஷ் வர்மா முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தேர்தல் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நுண் பார்வையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. தேர்தலன்று, நுண்பார்வையாளர்கள், 2 மணி நேரத்திற்கு முன்பாக காலை 5:00 மணிக்கு ஓட்டுச்சாவடிக்கு போக வேண்டும்.

ஓட்டுச்சாவடி மையத்தில் மின்சாரம், குடிநீர் வசதியை உறுதி செய்துகொண்டு, ஓட்டுப்பதிவுக்கு தயார் நிலையை உறுதி செய்ய வேண்டும்.

ஓட்டுச்சாவடியில் மாதிரி ஓட்டெடுப்பு முறையை கண்காணிக்க வேண்டும். மாதிரி ஓட்டெடுப்பு முடிந்து, தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் எண்ணிக்கை பூஜ்ஜியத்தை உறுதி செய்ய வேண்டும்.

ஏதேனும் பிரச்னை இருப்பின் மண்டல அலுவலர், மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் பொது பார்வையாளர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும்.

ஓட்டுச்சாவடியின் 100 மீட்டர் சுற்றளவிற்குள் வாகனங்கள் செல்லாமல் இருப்பதையும், பாதுகாப்பு போலீசார் உறுதி செய்ய வேண்டும். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க சாய்வுதள வசதி, சக்கர நாற்காலி, தன்னார்வலர் வசதியை உறுதி செய்ய வேண்டும்.

ஓட்டுப்பதிவு சரியான நேரத்தில் தொடங்குவதையும், சரியான நேரத்தில் முடிவடைவதை உறுதி செய்ய வேண்டும். ஓட்டுச்சாவடி முழு நிகழ்வுகளையும் தேர்தல் பொதுப் பார்வையாளர்களுக்கு உரிய படிவத்தில் அறிக்கையாக சமர்பிக்க வேண்டும்.

ஓட்டுப்பதிவு நிறைவடைந்தவுடன், ஓட்டுப்பதிவு இயந்திரத்தினை முகவர்கள் முன்னிலையில் சீலிட்டு பாதுகாப்பாக அனுப்புவதை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Advertisement