கோவை வந்த சிதம்பரத்தை சந்திக்காமல் வேட்பாளர்கள் புறக்கணித்ததால் பரபரப்பு

30

கோவை: கோவை வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தை, காங் வேட்பாளர்கள் சந்திக்கவில்லை.

கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிங்காநல்லூர் தொகுதியில் ஸ்ரீநிதி, கவுண்டம்பாளையம் தொகுதிக்கு சூரிய பிரகாஷ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

முன்னாள் மத்திய அமைச்சரும், காங். மூத்த தலைவருமான சிதம்பரம் நேற்று மதியம் கோவை விமான நிலையம் வந்தார். மாலை கோவை தெற்கு மற்றும் சூலூர் தொகுதிகளில் பிரசாரம் செய்தார். இரவு ஈரோட்டில் பிரசாரம் செய்தார். ஆனால் கோவையில் காங். போட்டியிடும் கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் தொகுதிகளில் பிரசாரம் செய்யவில்லை.

தி.மு.க. சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பு என்பதாலும், கோவையில் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு சீட் வழங்கவில்லை என்பதாலும் அவர் பிரசாரம் செய்யவில்லை என்றனர் கட்சியினர். மறுபக்கம் கோவை வந்த சிதம்பரத்தை காங். வேட்பாளர்கள் இருவரும் கூட மரியாதை நிமித்தமாக சந்திக்காமல் புறக்கணித்தனர். இதனால் அக்கட்சியின் உள்கட்சி விரிசல் மேலும் அதிகரித்துள்ளது.

காங். நிர்வாகிகள் கூறுகையில், "கோவை வந்த சிதம்பரத்தை விமானநிலையத்திலும் வரவேற்கவில்லை. ஓட்டலில் மதியம் 3 முதல் 4.30 மணி வரை தங்கியிருந்தும் சந்திக்கவில்லை. 2 வேட்பாளர்களும் இளைஞர்கள். சிதம்பரம் மூத்த தலைவர். இந்த கூட்டணி உருவாக காரணமே அவர் தான். வேட்பாளர்கள் அவரை சென்று சந்தித்திருந்தால் பிரச்னை முடிந்திருக்கும். இது தவறான போக்கு.

சிதம்பரம் நாளையும்(இன்றும்) கோவையில் உள்ளார். அவர் இங்கிருந்து புறப்படுவதற்குள் வேட்பாளர் சந்தித்தால், வேட்பாளர்கள் மீது அதிருப்தியில் உள்ள சீனியர்கள் தேர்தல் பணி செய்ய வாய்ப்புள்ளது. இல்லையென்றால் பிரச்னை தொடரவே வாய்ப்புகள் அதிகம்" என்றனர்.

Advertisement