கிரைம் கார்னர்:சென்னை
வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
விருகம்பாக்கம்: விருகம்பாக்கம், நாராயணசாமி தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ், 30. இவருக்கும், இவரது நண்பர் ஹரிஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
கடந்த 20ல், விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில், டீ கடையில் நின்றிருந்த விக்னேஷிடம், ஹரிஷ், 23, உட்பட ஆறு பேர் தகராறு செய்து, கத்தியால் வெட்டி தப்பிச் சென்றனர். விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து, ஹரிஷ், திருநாவுக்கரசு, 25, சின்னதம்பி, 25, ஆகிய மூன்று பேரை, நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
போலீஸ் எனக்கூறி பணம் பறிக்க முயற்சி
ஐஸ்ஹவுஸ்: திருவல்லிக்கேணி, ஓவியம் தெருவைச் சேர்ந்தவர் சாத்தையா, 46; டாக்டர் பெசன்ட் சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று, இவரது கடைக்கு வந்த இரண்டு பேர், போலீஸ் என அறிமுகமாகி, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதாக கூறி, 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.
சந்தேகமடைந்த கடைக்காரர், அவர்களுக்கு தெரியாமல், ஐஸ்ஹவுஸ் போலீசில் தெரிவித்தனர். பிடிபட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில், பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், 45, ரெட்டேரி சரத்குமார், 33, என்பது தெரியவந்தது. இருவரும் 'சீர்மிகு காவலர்கள்' என்ற பத்திரிகையாளர் அடையாள அட்டை வைத்திருந்தது தெரியவந்தது. இருவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
8 கிலோ கஞ்சா எழும்பூரில் பறிமுதல்
சென்னை: ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் நேற்று, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ஏழாவது நடைமேடைக்கு வந்தது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார், அந்த ரயிலின் முன்பதிவு இல்லாத பெட்டியில் கிடந்த பையை திறந்து பார்த்தபோது, அதில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு 4 லட்சம் ரூபாய். போலீசார், கஞ்சாவை எடுத்து போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.