நாட்டின் முதல் 'ஒமேகா கால்பந்து' சென்னை நியூ கல்லுாரி 'சாம்பியன்' ஒரே நேரத்தில் 3 அணிகள் களமிறங்கி விளையாடும்

சென்னை: கால்பந்து உலகில் புதிய திருப்பமாக, ஐ.ஐ.டி., அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் 'ஒமேகா கால்பந்து' போட்டியில், நியூ கல்லுாரி சாம்பியன் பட்டத்தை வென்றது.

'ஒமேகா கால்பந்து' என்பது, பாரம்பரிய கால்பந்தைவிட முற்றிலும் வேறுபட்டது. வழக்கமாக இரு அணிகள் மைதானத்தில் இறங்கும்; ஆனால் இதில் மூன்று அ ணிகள் இறங்கும்.

ஒவ்வொரு அணியிலும் தலா ஒரு கோல் கீப்பர் உட்பட ஐந்து வீரர்கள் என மொத்தம் 15 பேர் இறங்குவர்; மூன்று போஸ்ட் இருக்கும். இந்த விளையாட்டுக்கு பாதியளவு மைதானமே போதுமானது.

'ஆப்சைட்' விதி இல்லாததால், ஆட்டம் விறுவிறுப்பாக அதிகமாக இருக்கும். தலா 13 நிமிடங்கள் உடைய மூன்று சுற்றுகளாக போட்டி நடைபெறும். இடையில் தலா நான்கு நிமிடங்கள் ஓய்வு அளிக்கப்படுகிறது.

ஒரு அணி, மற்ற இரண்டு அணிகளின் 'போஸ்ட்'களில் கோல் அடிக்கலாம்.

இந்த விளையாட்டை, சென்னை ஐ.ஐ.டி., நிறுவனம் அறிமுகப்படுத்தி, நாட்டின் முதல் போட்டியை கிண்டி வளாகத்திலேயே நடத்தியது.

போட்டியில், குருநானக், அம்பேத்கர் சட்டக் கல்லுாரி, லயோலா, நியூ கல்லுாரி, நாசரேத், சவீதா மற்றும் ஒய்.எம்.சி.ஏ., அணிகள் மோதின. மூன்று குழுவாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன.

அனைத்து போட்டிகள் முடிவில், நியூ கல்லுாரி முதலிடத்தை கைப்பற்றி அசத்தியது. இரண்டாமிடத்தை அம்பேத்கர் சட்ட கல்லுாரியும், மூன்றாம் இடத்தை குருநானக் கல்லுாரியும் வென்றன.

முதல் நாள் போட்டியை, ஐ.ஐ.டி.,யின் இயக்குநர் காமகோடி துவங்கி வைத்தார். வெற்றி பெற்ற அணிகளுக்கு, மாணவர்களின் தலைவர் சத்தியநாராயண குமாரி பரிசுகளை வழங்கினார்.

சிறந்த வீரராக நியூ கல்லுாரி விணு, 'டாப் ஸ்கோர்' வீரர் நியூ கல்லுாரியை சேர்ந்த மணு, சிறந்த கோல் கீப்பர் ஐ.ஐ.டி., பாபாலு, சிறந்த 'செர்ரி பிக்கர்' ஐ.ஐ.டி., பந்தி ஆகியோர் தேர்வாகினர்.

இந்த விளையாட்டு குறித்து உடற்கல்வித்துறை இயக் குநர் எடின்பரோ கூறுகையில், ''ஒமேகா கால்பந்து போட்டியை, முதல் முறையாக ஐ.ஐ.டி., நிறுவனம் அறிமுகப்படுத்தி, மிகவும் சிறப்பாக நடத்தினோம். விளையாட்டிற்கு கிளப் உருவாக்கி வருகிறோம். விரைவில், சங்கங்களை துவங்கி போட்டி பிரபலப்படுத்தப்படும்,'' என்றார்.

Advertisement