முதல்வர் ஸ்டாலின் எல்லாவற்றிலும் அரசியல் செய்ய முயற்சி: அண்ணாமலை குற்றச்சாட்டு

17


கோவை: முதல்வர் ஸ்டாலின் எல்லாவற்றிலும் அரசியல் செய்ய முயற்சி; தமிழக மக்கள் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை வரவேற்கின்றனர் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராமனை ஆதரித்து
தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என முதல்வர் பொய் பிரசாரம் செய்கிறார். தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு ஆதாரம் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் எல்லாவற்றிலும் அரசியல் செய்ய முயற்சி.



தமிழக மக்கள் கொண்டு வரப்பட உள்ள பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை வரவேற்கின்றனர். ராகுல் தமிழகத்திற்கு வர தயாராக இல்லை; அவருக்கு தேர்தல் முடிவுகள் முன்பே தெரிந்துவிட்டது. கடல் அல்லது குளம் இருக்கும் ஊருக்குத்தான் ராகுல் வருவார். திமுக-காங்., கூட்டணி ஆமை புகுந்த வீடு போன்றது. 1985ல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது காங்கிரசை திமுக எதிர்த்தது.


இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி தான் இருந்தது. 1965ல் காங்கிரசை எதிர்த்த திமுக 1970ல் கூட்டணி வைத்தது. கட்சித் தீவை தாரை வார்த்த போது மத்தியில் காங்கிரஸ், மாநிலத்தில் திமுக ஆட்சி இருந்தது. தமிழகத்தில் இருந்து திமுக ஆட்சி அகற்றப்படப் போகிறது. கொங்கு மண்டலத்தில் உள்ள 27 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி வெல்லும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

@block_G@

உண்மை முகம் இதுதான்!

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை; திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் ஆதரவாளர்கள், பிச்சாண்டார் கோவில் ஊராட்சி பகுதியில், 25 வயதான இளம்பெண் சிந்துஜா என்ற சகோதரியை, ஆபாசமாகப் பேசி, அடித்ததால், அவர் மனமுடைந்து, தற்கொலை செய்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.


தமிழகம் முழுவதும், தேர்தல் நடைமுறைகளுக்கு விரோதமாக, கூப்பன் வழங்கி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுகவினர், தனக்கு கூப்பன் வழங்கப்படவில்லை என்று கேட்ட சகோதரி சிந்துஜா மீது, தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். திமுகவின் உண்மை முகம் இதுதான். எந்தக் காலத்திலும் ஓட்டளிக்கும் மக்கள் மீது, திமுகவினருக்கு மரியாதை கிடையாது.


தேர்தல் முடியும் முன்னரே, பெண் என்றும் பாராமல் ஆபாச வார்த்தைகள் பேசி, தாக்குதல் நடத்தி, ஒரு உயிர் பறிபோகக் காரணமாக இருக்கும் இந்த ரவுடி கும்பல், தேர்தல் முடிந்த பிறகு என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். வரும் தேர்தலில், இந்த திமுக அராஜக கும்பலை முழுமையாகப் புறக்கணிப்பதே, தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.block_G

Advertisement