ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களுக்கு  நலத்திட்டங்கள் அமல்படுத்தப்படும்: திராவிடமணியை ஆதரித்து லட்சுமணன் பிரசாரம்

கோட்டக்குப்பம்: திமுக., ஆட்சிக்கு வந்தவுடன், மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கொண்டு வரப்படும் என தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., கூறினார்.

வானுார் சட்டசபை தொகுதி தி.மு.க., வேட்பாளர் கவுதம் திராவிட மணியை ஆதரித்து கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பிரசாரம் செய்தார்.

முன்னதாக மாவட்ட பொருப்பாளர் லட்சுமணன் முன்னிலையில் கோட்டக்குப்பம் அ.தி.மு.க., 13வது வார்டு கிளை செயலாளர் கார்த்திகேயன், அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி செல்வம் ஆகியோர் தங்களை தி.மு.க.,வில் இணைத்துக்கொண்டனர். பின்னர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பேசியதாவது;

கடந்த ஐந்தாண்டுகால தி.மு.க., ஆட்சியில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதல்வரின் காலை உணவு திட்டம், மகளிர் உரிமை திட்டம், மக்களை தேடி மருத்துவ திட்டம், புதுமைப்பெண் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளார. தி.முக., மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்படும்.

நகராட்சியில் அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்படும். எனவே தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

ஓட்டு சேகரிப்பின் போது, நகர செயலாளர் ஜெயமூர்த்தி மற்றும் மதசார்பற்ற கூட்டணி கட்சி நகர நிர்வாகிகள், கோட்டக்குப்பம் கவுன்சிலர்கள், தி.மு.க., நகர நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement