'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'

- நமது நிருபர் -

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமீபத்தில் தமிழகம் வந்து, சென்னை மயிலாப்பூரிலும் மொடக்குறிச்சியிலும் ரோடு ஷோ நடத்தி, தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

தற்போது, மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டமாக தேர்தல் நடக்கவிருக்கும் தொகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார். டம்டம் உத்தர் தொகுதியில் நேற்றைய பிரசாரத்தில் அமித் ஷா பேசியதாவது:

சமீபத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு சென்று தேர்தல் பிரசாரம் செய்தேன். அப்போது, அங்கிருக்கும் மக்கள் மனநிலையை அறிந்து கொண்டேன்.

அதோடு, கட்சியினர் மற்றும் பல தரப்பு மக்களிடம் இருந்தும் கருத்துக்களை அறிந்து கொண்ட வகையில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் காங்கிரஸ், இரட்டை இலக்கத்தை தொடாது. ஒற்றை இலக்கத்தில் வேண்டுமானால், வெற்றி பெறலாம்.

காங்கிரசோடு கூட்டணியாக இருப்பதாலேயே, தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் தி.மு.க.,வும் இம்முறை தோல்வி அடையப் போகிறது. இந்தியா முழுதும் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தேய்ந்து வருகிறது.

அதோடு, கூட்டணி கட்சிகளையும் தோற்கடித்து வருகிறது. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் ஓரிடத்தில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாது.

இப்படி எந்த விபரமும் காங்., முன்னாள் தலைவர் ராகுலுக்கு தெரியாது. அவருக்கு அசாமிலும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அங்கும் காங்கிரஸ் சுத்தமாக தேறாது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தி.மு.க., - காங்.,குடன் கூட்டணி வைத்துக் கொண்டு, பா.ஜ.,வுடன் நெருக்கமாக இருக்கிறது என, தன் புதிய கண்டுபிடிப்பைச் சொல்லி இருக்கிறார்.

அப்படி, அவர் சொல்லும் கருத்துக்கு, தி.மு.க., தரப்பில் எந்த மறுப்பும் பெரிதாக சொல்லவில்லை. அதாவது, மம்தாவின் பொய்யை யாரும் நம்பப் போவதில்லை என விட்டு விட்டனர்.

அப்படி தி.மு.க., வோடு நட்பாகவோ நெருக்கமாகவோ இருக்க வேண்டிய அவசியம் பா.ஜ.,வுக்கு இல்லை. மம்தா, எந்த எல்லைக்கும் சென்று பொய்யை பேசுவார் என்பதற்கு, இதுவும் உதாரணம்.

எங்களுக்கு தெரிந்த வரையில், மம்தா தான், காங்கிரஸோடு மறைமுக உறவு வைத்திருக்கிறார். இப்படி செய்வதாலேயே, மேற்கு வங்கத்தில் மம்தா இம்முறை கட்டாயம் தோற்பார்.

ராகுலுடன் இருக்கும் தோஷமோ என்னவோ தெரியவில்லை, வர வர காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் தரம் தாழ்ந்து பேசுகிறார். ஒரு பிரதமரை மோசமாக விமர்சிக்கலாமா என்பது கூடத் தெரியாமல் விமர்சிக்கிறார்.

பிரதமர் மோடியை எவ்வளவு துாரம் விமர்சிக்கின்றனரோ, அந்தளவுக்கு அவர் வளர்வதோடு, பா.ஜ.,வையும் தாமரையையும் சேர்த்து வளர்க்கின்றனர் என்பதாகவே பார்க்கிறேன். அதனால், அந்தப் பணியை அவர்கள் செய்யட்டும்.

இவ்வாறு பேசினார்.

Advertisement