சரியான நேரத்தில் ஓட்டுப்பதிவு: அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

சூலுார்: ''சரியான நேரத்தில் ஓட்டுப்பதிவை துவங்க வேண்டும்,'' என, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சூலுார் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, பயிற்சி முகாம் நடந்நது. 1,878 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து, வெளி மாவட்டம், வேறு தொகுதியை சேர்ந்தவர்கள் தபால் ஓட்டளித்தனர்.

பயிற்சியாளர்கள் பேசியதாவது:

ஓட்டுப்பதிவு முந்தைய நாள் அனைத்து சாதனங்களும் உள்ளனவா என்பதை உறுதி செய்யவேண்டும். இல்லாத பொருட்கள் குறித்து உடனடியாக மண்டல அலுவலர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். இயந்திரங்களின் இணைப்புகள் சரியாக உள்ளதா என, ஆய்வு செய்ய வேண்டும். ஓட்டுப்பதிவு நாளன்று, மாதிரி ஓட்டுப்பதிவு முடிந்தவுடன், சரியான நேரத்தில் துவங்க வேண்டும். தாமதம் ஏற்பட்டால் குறித்து வைக்க வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தான் முடிவு செய்யும் அதிகாரம் உள்ளது.

முதன்முறையாக ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு மொபைல் செயலி வழங்கப்பட உள்ளது. அதில் பதிவான ஓட்டுகளை பதிவு செய்ய வேண்டும். ஓட்டுப்போட கட்டாயப்படுத்தக் கூடாது. ஓட்டு சரியாக பதிவாகி உள்ளதா என கவனமாக கண்காணிக்க வேண்டும். இயந்திர கோளாறு ஏற்பட்டால், ஓட்டுப்பதிவை நிறுத்தலாம். ஓட்டுப்பதிவு முடிந்த பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு 'சீல்' வைத்து பாதுகாப்புடன் மண்டல அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் பேசினர்.

Advertisement