படுகரின மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை

ஊட்டி: ''படுகரின மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்தியில் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் நடந்த பொது கூட்டத்தில் பா.ஜ., வேட்பாளர் போஜராஜனுக்கு ஆதவாக, மாஜி அமைச்சர் வேலுமணி பேசியதாவது:

தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் சங்கிலி பறிப்பு அதிகரித்துள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் கஞ்சா விற்பனை தடையின்றி நடக்கிறது. தி.மு.க., சொத்து வரி மற்றும் இதர வரிகளை விதித்து, மக்களிடமிருந்து அதிக பணத்தை பறிப்பது, விஞ்ஞான ரீதியான ஏமாற்று வேலையில் ஈடுபட்டு, மகளிருக்கு உதவித்தொகை வழங்குகிறது.

பிரதமர் மோடி தமிழகத்திற்கு ஒரே நேரத்தில், 11 மருத்துவ கல்லுாரிகளை ஒதுக்கினார். அதில், ஒன்று நீலகிரிக்கு கிடைத்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் தான் ஊட்டியில் கலெக்டர் அலுவலகம், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், பழங்குடியினர் பண்பாட்டு மையம் கட்டப்பட்டன. சாலை விரிவாக்கப் பணிகள் நடந்தது.

இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால், பசுந்தேயிலை கிலோ ஒன்று, 35 ரூபாய் கிடைக்கவும், படுகர் சமுதாய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுடன் பேசி உரிய முயற்சி எடுக்கப்படும். விரைவில் ஊட்டியில், 'மல்டி லெவல் பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்படும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும், 2000 ரூபாய் உதவி தொகை; ஒரு முறை, 10 ஆயிரம் ரூபாய், ஆண்டுக்கு, மூன்று இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு நிலம் வழங்கி வீடு கட்டித் தரப்படும். எனவே, நீலகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், பெண்களின் பாதுகாப்பிற்கும் தாமரை சின்னத்திற்கு வாக்களித்து போஜராஜனை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் வினோத், பா.ஜ, மாவட்ட தலைவர் தருமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement