ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 :அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம் பிரசாரம்

காஞ்சிபுரம்: ''அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபாய் சிறப்பு உதவித்தொகையாக வழங்கப்படும்,'' என, காஞ்சிபுரம் வேட்பாளர் சோமசுந்தரம், கிராமங்களில் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., மாவட்ட செயலருமான சோமசுந்தரம் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், கூட்டணி கட்சியினருடன், கிராமங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று காஞ்சிபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கம், சிறுவாக்கம், விஷகண்டிகுப்பம், பெரியகரும்பூர், புதுப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார். இக்கிராமங்களில் வாலாஜாபாத் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலர் அத்திவாக்கம் ரமேஷ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், கட்சி பொது செயலர் பழனிசாமி தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, வாரிசுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபாய் சிறப்பு உதவித்தொகையாக வழங்கப்படும் என, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையை விளக்கி கூறி, இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு கூட்டணி கட்சியினருடன் பிரசாரம் செய்தார்.

இதில், வர்த்தக பிரிவு செயலர் மதன்குமார், மாணவர் அணி செயலர் திலக்குமார், மாவட்ட அம்மா பேரவை இணை செயலர் படுநெல்லி தயாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement