தமிழகத்தின்  உற்பத்தி துறையில் கோவையின்  பங்கை  25 சதவீதமாக உயர்த்திக் காட்டுவோம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி  

1

கோவை: ''தமிழகத்தின் உற்பத்தி துறையில் கோவையின் பங்களிப்பை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்துவோம்,'' என கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜி கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

கோவையில் இன்னமும் சாலை பிரச்னைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒரு சாலை அமைத்தால், அதன் ஆயுள் 5 ஆண்டுகள். அதன் பிறகே புதிய சாலை போட முடியும். 10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தது.

2020-21ல் சாலை அமைத்திருந்தால், 5 ஆண்டுகள் கழித்தே மீண்டும் சாலை போட முடியும். 2019ல் சாலை அமைத்திருந்தால் கூட 5 ஆண்டுகள் கழித்து 2024ல் தான் நாங்கள் சாலை அமைத்திருக்க முடியும்.

நாங்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் ஆண்டில் இருந்தே ரோடு மோசமாக இருக்கிறது என்கிற விமர்சனம் வந்தது என்றால், அதற்கு காரணம் என்ன? அ.தி.மு.க. ஆட்சியில் சாலைகள் போடவில்லை.

முதல்வரிடம் மூன்று முறை சிறப்பு நிதி பெற்று, ரூ.760 கோடியில் 1,706 கி.மீ. துாரத்துக்கு சாலை அமைத்தோம். 2021 சட்டசபை தேர்தல் சமயத்தில், மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை தருவோம் என தி.மு.க. வாக்குறுதி தந்தது. முதலில், 1.06 கோடி மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கினோம்.

விடுபட்டோருக்கு இரண்டாவது தவணையாக வழங்கப்பட்டது. அதிலும் விடுபட்டோர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு தரப்பட்டது. சொன்ன வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி விட்டார். இத்தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், ரூ.2,000 ஆக உயர்த்தி தருவோம் என கூறியிருக்கிறார். கண்டிப்பாக செயலில் காட்டுவார்.

916 ஹால் மார்க் லைசென்ஸ் எடுத்துக் கொள்வதற்காகவே, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக, அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் கூறியிருக்கிறார். நான் என்ன நகைக்கடையா வைத்திருக்கிறேன்; அந்த லைசென்ஸ் மத்திய அரசு வழங்குகிறது.

மாநில அரசு அனுமதி கொடுக்கும் துறையாக இருந்தால் கூட குற்றச்சாட்டு சொல்லலாம். மத்திய அரசு தரக்கூடிய உரிமம் அது; இதில், என்னுடைய ரோல் எங்கே இருக்கிறது.

தமிழகத்தின் உற்பத்தி துறையில் கோவையின் பங்கு 15 சதவீதமாக இருக்கிறது; அதை 25 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்து உள்ளோம். தொழில்துறையுடன் இணைந்து அரசுடன் ஒன்றாக பயணித்து இலக்கை எட்டுவோம். தொழில்துறைக்கு பக்கபலமாக செயல்படுவேன்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement