ரூ.8000 கூப்பன் விநியோகிக்க தி.மு.க.வுக்கு தேர்தல் கமிஷன் தடை!

17

சென்னை : தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் தி.மு.க., வேட்பாளர்களும், அக்கட்சி தொண்டர்களும், வாக்காளர்களுக்கு 8,000 ரூபாய் கூப்பன் மாதிரிகளை வழங்க தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

'சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தி.மு.க., ஆட்சி அமைத்தால், இல்லத்தரசிகளுக்கு 8,000 ரூபாய் கூப்பன் வழங்கப்படும். இதில், வீட்டுக்கு தேவையான 'பிரிஜ், வாஷிங் மெஷின், இன்டக் ஷன் ஸ்டவ், மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்' என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம், இந்த கூப்பன் தொடர்பாக பேசி வருகிறார்.


புகார்





இந்நிலையில், பல்வேறு தொகுதிகளில் 8,000 ரூபாய்க்கான கூப்பன் மாதிரிகளை, தி.மு.க., வேட்பாளர்கள் உள்ளிட்ட அக்கட்சியினர் வீடு வீடாக வினியோகம் செய்து வருகின்றனர். இது, பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை, ஜி.ஏ., சாலையில் உள்ள வீடுகளில், நேற்று முன் தினம் இரவு தி.மு.க.,வைச் சேர்ந்த நான்கு பெண்கள், 8,000 ரூபாய் மதிப்புள்ள கூப்பன்களை கொடுத்துள்ளனர்.

'தி.மு.க.,விற்கு ஓட்டு போட்டு, தி.மு.க.,வை ஜெயிக்க வைக்க வேண்டும்; அப்படி செய்தால் தான், இந்த கூப்பன் செல்லும்; இல்லையெனில் செல்லாது' என கூறி, வலுக்கட்டாயமாக ரேஷன் அட்டையை வாங்கி புகைப்படம் எடுத்து சென்றுள்ளனர்.

அதேபோல், பழைய வண்ணாரப்பேட்டை, ஹவுசிங் போர்டில் உள்ள வீடுகளில் கூப்பன் வினியோகம் செய்த தி.மு.க.,வினர் மறவன், 32, சகாயராஜ், 58, ஆகியோர் மீது, தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் பறக்கும் படையினர் விரைந்து வந்து, அவர்களிடமிருந்து ஏழு கூப்பன்களை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.

தர்மபுரியில் தி.மு.க.,வினர் வினியோகம் செய்த 8,000 ரூபாய் கூப்பன் மாதிரியை சில பெண்கள் எடுத்துக் கொண்டு, கடைகளுக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளனர்; இதற்கெல்லாம் பொருள் தர முடியாது என கூறவே, ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

கும்பகோணம், ஸ்ரீரங்கம் உட்பட சில தொகுதி களில், தி.மு.க.,வினர் கூப்பன் வினியோகம் செய்ததை, த.வெ.க.,வினர் தடுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.


அறிக்கை





தி.மு.க., தரப்பில், 8,000 ரூபாய் கூப்பன் வினியோகம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, அ.தி.மு.க.,வினர் தேர்தல் கமிஷனில் புகார் மனு அளித்தனர்.
அதை தொடர்ந்து, கூப்பன் வழங்க அனுமதி பெற்றுள்ளதாகக் கூறி, தி.மு.க.,வினர் ஒரு கடிதத்தை வெளியிட்டனர். அதற்கு விளக்கம் அளித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கை:

தி.மு.க.,வினரின் கூப்பன் வினியோகத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என, அ.தி.மு.க., தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வதற்கு மட்டுமே 8,000 ரூபாய் கூப்பன் தொடர்பான அனுமதி, தேர்தல் கமிஷனால் வழங்கப்பட்டு உள்ளது.


பொருந்தாது





கூப்பன் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் அல்லது கைப்பிரதிகளை வினியோகம் செய்வதற்கு, அந்த அனுமதி பொருந்தாது. எனவே, கூப்பன் வழங்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக கூறுவது, உண்மைக்கு புறம்பானதும், தவறாக வழி நடத்தக்கூடியதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட திருமலைசமுத்திரம் ஊராட்சியில், தி.மு.க.,வினர் 8,000 ரூபாய் மாதிரி கூப்பன்களை வீடு வீடாக வினியோகம் செய்தனர்.

இவ்வாறு செய்வது, மக்களை ஏமாற்றும் செயலாகும்; இது குற்றம் என கூறி, த.வெ.க., வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ஆதித்ய சோழன், 'ஆன்லைன்' வாயிலாக திருச்சி மாவட்ட போலீசில் புகார் அளித்தார். ஆனால், அந்த புகாரை போலீசார் நிராகரித்துள்ளனர்.

'இது வெறும் துண்டு பிரசுரம் மட்டுமே; கூப்பன் இல்லை. இதில், குற்றவியல் நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை' என விளக்கம் அளித்து, புகாரை போலீசார் நிராகரித்துள்ளனர். அதை தொடர்ந்து, கூப்பன் வினியோகத்தை தடுக்க, தேர்தல் கமிஷனில் த.வெ.க.,வினர் வலியுறுத்தினர்.

@block_B@ கூப்பன் வினியோகம் செய்தால் வழக்கு

'தி.மு.க.,வினர் 8,000 ரூபாய் கூப்பன் மாதிரிகளை வினியோகம் செய்தால், நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது: தேர்தல் கமிஷன் அனுமதியின்றி துண்டு பிரசுரங்களை அச்சிட்டு வினியோகிப்பது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 127 'பி'யின் கீழ் தண்டனைக்குரிய குற்றம். சில மாவட்டங்களில் 8,000 ரூபாய் கூப்பன் வினியோகம் செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது போன்று துண்டு பிரசுரங்கள் வினியோகித்தால், அவை பறிமுதல் செய்யப்படும். அவற்றை அச்சிட்டவர், வினியோகம் செய்தவர், கையில் வைத்திருப்போர் என, அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக, போலீசாருக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.block_B

Advertisement