பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்ய கோரிக்கை

1

- டில்லி சிறப்பு நிருபர் -: வேட்பு மனுவில் சொத்து விபரங்களை மறைத்தது தொடர்பான விவகாரத்தில், பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

கடந்த, 2021ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில், சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, வேட்பு மனுவில் தன் சொத்து விபரங்களை மறைத்து, பொய்யான தகவல்களை தெரிவித்ததாக, மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

ஏற்கனவே இந்த விவகாரத்தில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு இருந்ததாவது:

பழனிசாமி உச்ச நீதிமன்றத்தை நாடியதே தவறு. காரணம், தேர்தல் முறைகேடு குறித்து எந்த ஒரு நபரும் நீதிமன்றத்தை நாட முடியும். எனவே, இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்துவது அவசியமாகிறது. இந்த விவகாரங்களை கருத்தில் கொண்டு, பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement