பிரிகேடியர், மகனை தாக்கிய இருவர் ஜாமினில் விடுதலை

புதுடில்லி, காரில் அமர்ந்து மது அருந்திய புகாரில், ராணுவ அதிகாரி மற்றும் மகனை கும்பலால் தாக்கியதாக கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் ஜாமின் வழங்கி, டில்லி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

தென் மேற்கு டில்லியின் வசந்த் விஹார் என்ற இடத்தில், அடுக்கு மாடி குடியிருப்பில், மெர்சிடஸ் பென்ஸ் காரில் அமர்ந்து, மது குடித்ததாக, சத்யேந்தர் என்ற சோனு, 49, விமான நிறுவன இயக்குனர் மற்றும் சஞ்சய் சர்மா, 56, என்ற ஹோட்டல் உரிமையாளர் ஆகிய இருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை கண்டித்ததாக கூறி, கும்பல் ஒன்றை அவர்கள் அழைத்து வந்து, ராணுவத்தில் பிரிகேடியராக இருக்கும் ஒருவர் மற்றும் அவரது மகனும், ஐ.ஐ.டி., பட்டதாரியுமான வாலிபரை தாக்கினர்.

இந்த விவகாரத்தில், டில்லி துணை நிலை ஆளுநர் தலையிட்டதை அடுத்து, சோனு மற்றும் சஞ்சய் சர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அமர்ந்திருந்த மெர்சிடஸ் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இருவரையும் நேற்று விடுவித்துள்ள போலீசார், விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் படி, வெளியே விட்டுள்ளனர்..

Advertisement