திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்

6

சென்னை: 'அ.தி.மு.க., வேட்பாளர் பொற்கொடி, திரு.வி.க., நகர் தொகுதி முழுதும் ரவுடிகளை களமிறக்கியுள்ளார்' என, தி.மு.க., வேட்பாளர் ரவிச்சந்திரன் தேர்தல் கமிஷனில் புகார் தெரிவித்துள்ளார்.

அவரது புகார் விபரம்: சென்னை திரு.வி.க., நகர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போட்டியிடுகிறார்; தொகுதியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை அவர் ஏற்படுத்தி வருகிறார்.

டைமண்ட் ராஜா என்பவரது திருமண மண்டபத்தில், தொகுதிக்கு தொடர்பில்லாத வெளி நபர்களை பொற்கொடி தங்க வைத்துள்ளார்.

அதில், சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ரவுடிகளும் உள்ளனர். தன் கணவர் ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு நீதி கேட்பதாகக் கூறி, தன் 3 வயது பெண் குழந்தையை தேர்தல் பணியில் ஈடுபடுத்துகிறார்.

வேட்பாளரின் இந்த செயல், பெண் வாக்காளர்களிடம் அனுதாபத்தை பெறுவதற்காக செய்யப்படுகிறது. பெண் வாக்காளர்கள், ரவுடிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.

வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் உட்பட பல வகை பொருட்களை பொற்கொடி வினியோகம் செய்துள்ளார். தேர்தல் கமிஷன் அனுமதி பெறாத வாகனங்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த வாகனங்கள், தேர்தல் கமிஷனால் தடை செய்யப்பட்ட அனைத்து சட்ட விரோத செயல்களிலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

இவற்றை தட்டிக்கேட்ட தி.மு.க., வார்டு செயலரை கடுமையாக தாக்கி உள்ளனர். எனவே, திரு.வி.க., நகர் தொகுதியில் ரவுடிகள் மற்றும் வெளியாட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement