'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000

சென்னை: ஓட்டுச்சாவடி மையங்களில் இன்று பணியமர்த்தப்படும் 'பூத்' ஏஜன்ட்களுக்கு, தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் தலா, 2,000 ரூபாய் வழங்கியுள்ளனர்.

மேலும், பூத்தில் எத்தனை ஓட்டுகள் பதிவாகின்றன என்ற விபரத்தை துல்லியமாக கணக்கெடுக்க, பென்சில், பேனா, நோட்டு புத்தகம் அடங்கிய தொகுப்பையும் வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 75,064 ஓட்டுச்சாவடிகளில், கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் சார்பில், 'பூத் ஏஜன்ட்' எனப்படும் ஓட்டுச்சாவடி முகவர்கள் பணியமர்த்தப்படுவர்.

அவர்கள், ஓட்டுச்சாவடிக்குள் வாக்காளர்கள் வந்து ஓட்டுப்பதிவு செய்ததும், தங்களிடம் உள்ள வாக்காளர்கள் பட்டியல் நகலில், அவரின் எண்ணை சரிபார்த்து, 'டிக்' செய்து கொள்வர்.

ஒவ்வொருவரும் ஓட்டு செலுத்தியதும், நோட்டில் ஒன்று, இரண்டு என்று வரிசை எண்ணை எழுதுவர்.

இதற்காக, தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் அவற்றின் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களும், பூத் ஏஜன்ட்களுக்கு வாக்காளர்கள் பட்டியல் நகல், நோட்டு புத்தகம், அட்டை, பேனா, பென்சில், ரப்பர், ஓட்டுப்பதிவு இயந்திரத்தை, 'சீல்' வைக்க உதவும் அரக்கு, மெழுகுவர்த்தி போன்றவை அடங்கிய தொகுப்புகளை வழங்கியுள்ளனர்.

ஏற்கனவே, தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் முக்கிய பண்டிகை நாட்களில், பூத் ஏஜன்ட்களுக்கு தலா, 5,000 ரூபாய் - 10,000 ரூபாய் என வழங்கி வந்த நிலையில், இந்தாண்டின் துவக்கத்தில் இருந்து மாதம் ஒரு முறை தலா, 2,000 ரூபாய் - 5,000 ரூபாய் என வழங்கியுள்ளனர்.

இன்றைய பணிக்காக தலா, 2,000 ரூபாய் வழங்கியுள்ளனர். கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் த.வெ.க., - நா.த.க.,வினர் தலா, 1,000 ரூபாயை பூத் ஏஜன்ட்களுக்கு வழங்கியுள்ளனர்.

மேலும், அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் ஏஜன்ட்களுக்கு காலை டிபன், மதியம் பிரியாணி, மாலையில் வடை, சுண்டல், டீ, காபி, இரவு டிபன் வழங்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

Advertisement