வாக்காளர்களுக்கு ரூ.8000 போலி கூப்பன் சிவகங்கையில் வழங்கிய தி.மு.க.,வினர்  அதிகாரியிடம் அ.தி.மு.க., புகார்  

1

சிவகங்கை: சிவகங்கையில் வீடு தோறும் வாக்காளர்களுக்கு தி.மு.க.,வினர் இல்லத்தரசி ரூ.8000 க்கான போலி கூப்பன்களை வழங்கினர். அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை பிடித்து, தேர்தல் கண்காணிப்பு குழு,போலீசிடம் ஒப்படைத்தனர்.

தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு ரூ.8000 கூப்பன் வழங்கப்படும். அந்த கூப்பனை ேஷாரூம்களில் கொடுத்து பொருட்களை வாங்கி கொள்ளலாம் என தெரிவித்தது. இதை செயல்படுத்துவது போல் போலியாக இல்லத்தரசி ரூ.8,000 க்கான கூப்பனை தயாரித்து தி.மு.க.,வினர் வழங்கி வருகின்றனர்.

நேற்று சிவகங்கையில் வீடுகளில், இல்லத்தரசி ரூ.8,000 என்ற கூப்பனை வாக்காளர்களுக்கு வழங்கினர். அ.தி.மு.க., நகர் செயலாளர் என்.எம்., ராஜா, முன்னாள் நகர் செயலாளர் கே.வி., சேகர், பா.ஜ., நகர் தலைவர் உதயா, பொது செயலாளர் பாலா உள்ளிட்டோர் கூப்பன் வினியோகம் செய்த தி.மு.க.,வைச் சேர்ந்த முருகானந்தம், பாபுவை பிடித்து சிவகங்கை தொகுதி தேர்தல் அலுவலர் ஜெபிகிரேசியாவிடம் புகார் அளித்துவிட்டு கண்காணிப்பு குழுவினரிடம் ஒப்படைத்தனர்.

இருவரையும், ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்து செல்லவில்லை. அவ்வழியே காரில் வந்த தி.மு.க., நகர் செயலாளர் துரை ஆனந்த் இருவரையும், தனது காரில் அழைத்து சென்று விட்டார்.

இதையடுத்து அ.தி.மு.க.- பா.ஜ.,வினர் நாங்கள் பிடித்து கொடுத்த இருவரையும் எப்படி விட்டீர்கள் என கேட்டு நிலை கண்காணிப்பு குழு, இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் சிவகங்கை போலீஸ் ஸ்டேஷனில் கூடினர். பின்னர் முருகானந்தம், பாபு இருவரையும் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். சிவகங்கை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement