நம்புதாளையில் குடிநீர் தட்டுப்பாடு

தொண்டி: தொண்டி அருகே நம்புதாளையில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 47 ஊராட்சிகளில் அதிக மக்கள் தொகையை கொண்டது நம்புதாளை ஊராட்சி. பல ஆயிரம் குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் அடிப்படை தேவையான குடிநீருக்கு பெரும் திண்டாட்டமாக உள்ளது. தற்போது கோடைவெயில் துவங்கிய நிலையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது.

ஊராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்படும் குடிநீர் முறையாக வழங்காததால் மக்கள் டேங்கர் லாரிகளில் விற்பனையாகும் ஒரு குடம் குடிநீருக்கு ரூ.15 வரை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தினசரி வருமானத்தில் பெரும் பகுதியை தண்ணீருக்கே செலவிடுவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எங்கள் ஊராட்சியில் மக்கள் தொகை அதிகம் என தெரிந்தும் குடிநீருக்காக புதிய திட்டங்களை செயல்படுத்தவில்லை. ஜல்ஜீவன் திட்டமும் நடக்காமல் கிடப்பில் உள்ளது என்றனர்.

--

Advertisement